இந்தியர்கள் விரும்பி சாப்பிடும் 10 உணவு வகைகள்


இந்தியர்கள் விரும்பி சாப்பிடும் 10 உணவு வகைகள்
x
தினத்தந்தி 27 Aug 2023 7:42 AM IST (Updated: 27 Aug 2023 7:42 AM IST)
t-max-icont-min-icon

நம் நாடு மாறுபட்ட கலாசார பின்னணியை கொண்டது. ஆனாலும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சிறப்பம்சங்களை ஒருங்கே அமையப்பெற்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் உடுத்தும் உடை, உண்ணும் உணவுகள் மாறுபட்டாலும் பெரும்பாலானவர்களின் விருப்ப தேர்வு ஒரே மாதிரியாகவே அமைந்திருக்கிறது. இந்தியர்கள் விரும்பி உண்ணும் முதல் 10 உணவு வகைகளின் தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவை பலருக்கும் பரீட்சயமான உணவு வகைகளாகவே இருக்கிறது. உணவகங்களில் பெரும்பாலானோர் ஆர்டர் செய்யும் உணவாகவும் அமைந்திருக்கிறது. அந்த பட்டியல் உங்கள் பார்வைக்கு...

தந்தூரி:

இது உருளை வடிவ களிமண் அடுப்பில் நெருப்புக்கு மத்தியில் சுட்டெடுக்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பரவியது. அங்கு ஆரம்பத்தில் ரொட்டியை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.

இங்கு கோழி இறைச்சியுடன் மசாலா கலந்து பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு அதில் தயிர் சேர்த்து சுவை கூட்டப்பட்டது. மேலும் களிமண் அடுப்புகள் இறைச்சிக்கு தனித்துவமான சுவை சேர்ப்பதாக கருதப்பட்டது. அதன் ருசி பலருக்கும் பிடித்துப்போகவே இந்திய உணவு வகைகளின் ஒரு அங்கமாக தந்தூரி மாறிவிட்டது.

நான் ரொட்டி:

இதுவும் தந்தூரி அடுப்பில் சுட்டெடுக்கப்படும் உணவுப்பொருளாகும். மாவு, ஈஸ்ட், முட்டை, பால், உப்பு, சர்க்கரை உள்ளிட்டவை கலந்து தயாரிக்கப்படுகிறது. இது கி.பி.1300-ம் ஆண்டிலேயே பரிமாறப்பட்டதாக ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது.

கோர்மா:

குங்குமப்பூ, தயிர், கொத்தமல்லி, இஞ்சி, சீரகம், மிளகாய் மற்றும் மஞ்சள் போன்ற மசாலாப் பொருட்களை கொண்டு தயார் செய்யப்படுகிறது. 1500களின் மத்தியில் பாரசீக மற்றும் இந்திய உணவு வகைகளின் கலவையாக விளங்கியது. அக்பரின் அரச சமையலறையில் இருந்து இது தோன்றியதாக நம்பப்படுகிறது. சைவம், அசைவம் இரண்டிலுமே கோர்மா தயார் செய்யப்படுகிறது.

டிக்கா:

சிக்கன், மட்டன், பன்னீர் என பல விதமான வகைகளில் டிக்கா தயாரிக்கப்படுகிறது. எலும்பு இல்லாத இறைச்சியை பாரம்பரிய மசாலா பொருட்களுடன் கலந்து தயாரிப்பது அதன் சுவையை மெருகேற்ற உதவுகிறது. இதுவும் களிமண் அடுப்பில் வறுத்தெடுக்கப்படுகிறது. ஆனாலும் எலும்புகளை அப்படியே வைத்து தயாரிக்கப்படும் தந்தூரி சிக்கனில் இருந்து வேறுபட்டது. மென்மையான இறைச்சி கலவையை கொண்டிருப்பது பலருக்கும் விருப்பமான உணவாக மாறிவிட்டது.

சமோசா:

முக்கோண வடிவில் காட்சி அளிக்கும் இது சிற்றுண்டி மட்டுமல்ல. உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, பட்டாணி, அரைத்த இறைச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் தயாரிக்கப்பட்டு ருசிக்கப்படுகிறது. மத்திய ஆசியாவில் தோன்றிய சமோசாக்கள் பண்டையகால வணிகத்தின் வழியே இந்தியாவிற்குள் நுழைந்தன. இப்போது விதவிதமான வகைகளில், சுவைகளில் தயாரிக்கப்படுகின்றன.

பட்டர் பூண்டு நான்:

இது தந்தூரி வகை உணவுகள் தயாரிக்கப்படும் அடுப்பில் சுட்டெடுக்கப்படுகிறது. நெருப்புக்கு மத்தியில் வேகவைக்கப்பட்டு பொன்னிறமாக மாறும்போது வெளியே எடுத்து பரிமாறப்படுகிறது.

அதன் மீது வெண்ணெய் அல்லது நெய் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். பட்டர் சிக்கன், இறைச்சி வகை மசாலாக்களுடன் சாப்பிட்டால் ருசி இன்னும் அமோகமாக இருக்கும்.

சாப்பாடு:

இந்தியன் தாலி என அழைக்கப்படும் இது பலவகையான உணவு வகைகளை உள்ளடக்கியது. வட்ட வடிவ தட்டில் சாப்பாடு, பருப்பு, காய்கறிகள் கலந்த குழம்பு, கூட்டு, பொறியல், சட்னி, ஊறுகாய், அப்பளம், இனிப்பு என பல்வேறு வகைகளுடன் பரிமாறப்படுகிறது. சைவ, அசைவ உணவுகள் இரண்டும் கொண்டது.

தோசை:

சிறந்த காலை உணவுகளில் ஒன்றான இது தென்னிந்தியாவில் அதிகம் ருசிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பலரும் விரும்பி உண்ணும் உணவாகவும் இருக்கிறது. ஊறவைத்த அரிசி, உளுந்து கலந்து ஒரே இரவில் புளிக்கவைக்கப்பட்டு தோசையாக வார்த்தெடுக்கப்படுகிறது.

விண்டலூ: ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகள், இறால் போன்றவைகளை கொண்டு சமைக்கப்படுகிறது. கோவா, கொங்கன் மற்றும் பிரிட்டனில் பிரபலமாக விளங்குகிறது. போர்த்துக்கீசியர்கள் வழியாக 15-ம் நூற்றாண்டில் கோவாவிற்கு கொண்டு வரப்பட்டது. உள்ளூர் பொருட்களுக்கு ஏற்றவாறு புளி, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் மிளகாய் போன்ற இந்திய மசாலாப் பொருட்களுடன் இறைச்சி, பன்னீர் இடம் பெற்றுள்ளன.

பட்டர் சிக்கன்:

இது 1950களில் டெல்லியில் உள்ள மோதி மஹால் உணவகத்தில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்குள்ள சமையல்காரர்கள் மீதமுள்ள இறைச்சியை தக்காளி மற்றும் வெண்ணெய்யுடன் சேர்த்து சாஸ் பதத்துக்கு உருவாக்கினார்கள்.

பின்பு அதில் மசாலா கலக்கப்பட்டு சுவை கூட்டப்பட்டது. மீதமான இறைச்சியை வீணாக்க மனமின்றி சமையல்காரர்கள் தற்செயலாக தயார் செய்த மாற்று உணவு இன்று சர்வதேச உணவாக மாறிவிட்டது.


Next Story