உலக அல்சைமர் தினம்
உலக அல்சைமர் தினம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ந் தேதி அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
அல்சைமர் நோய்க்கான காரணம் மற்றும் அதன் தீவிரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1994-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி உலக அல்சைமர் தினம் தொடங்கப்பட்டது. அல்சைமர் என்பது மூளையை பாதிக்கும் நரம்பு தொடர்புடைய ஒரு வகை நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படிப்படியாக தங்களின் நினைவாற்றலை இழந்து விடுகின்றனர். உலகளவில் 5.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்கு அல்சைமர் நோய் வருவதற்கான ஆபத்து அதிகம். அல்சைமர் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
2023-ம் ஆண்டுக்கான உலக அல்சைமர் தினத்தின் கருப்பொருள் `எப்போதும் சீக்கிரம், ஒருபோதும் தாமதமாகாது' என்பதாகும். 1901-ம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் போது இந்த நோயை முதன்முதலில் ஜெர்மன் மனநல மருத்துவரான `அலோயிஸ் அல்சைமர்' என்பவர் கண்டறிந்தார். எனவே இந்த நோய்க்கு அவரது பெயரே வைக்கப்பட்டது.
சமீபத்திய நிகழ்வுகளை நினைவுபடுத்த இயலாமை என்பது நோயின் ஆரம்ப அறிகுறியாகும். மேலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உள்ள சவால்கள், வீட்டில் அல்லது வேலையில் தெரிந்த பணிகளை முடிப்பதில் சிரமம், நேரம் அல்லது இடத்ைத அறிவதில் குழப்பம், படிப்பதில் சிரமம், நிறத்தை அடையாளம் காண்பதில் சிரமம், பாதையை மறப்பது, தேதி மற்றும் நேரம் தவறாக வைப்பது ஆகியவை இதன் அறிகுறிகளாகும். ஆரம்பகால கண்டறிதல், இந்த நோய்க்கு திறம்பட சிகிச்சையளிக்க உதவுகிறது.
இந்தநாளில் உலகெங்கிலும் கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் ஆகியவை நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.