கல்வியின் சிறப்பு
மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கல்வி மிகவும் அவசியமானது. கல்வி ஒன்று தான் பிறப்பில் இருந்து இறப்பு வரை ஒரு மனிதனுடன் கூட வரக்கூடியது.
முன்னுரை:
''கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்'' என்கின்றார் வள்ளுவ பெருந்தகை.
அதாவது கற்றவர் மட்டுமே கண்ணுடையவர்களாக கருதப்படுவர். கல்வி கற்காதவர்கள் கண் இருந்தும் முகத்திரண்டு புண்ணுடையவர்களாக கருதப்படுவர் இதுவே இதன் கருத்து ஆகும். மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கல்வி மிகவும் அவசியமானது. கல்வி ஒன்று தான் பிறப்பில் இருந்து இறப்பு வரை ஒரு மனிதனுடன் கூட வரக்கூடியது.
கல்வியின் சிறப்பு:
மன்னரும் பாசக்கற்றோரும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையான் மன்னனிற்கு தன் தேசமல்லாமல் சிறப்பில்லை. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. கல்வியின் பெருமையை மூதுரை இவ்வாறு குறிப்பிடுகின்றது. அதாவது ஒரு நாட்டின் மன்னனையும், நன்றாக கற்றறிந்த ஒருவரையும் ஒப்பிட்டு பார்த்தால், மன்னரை விட கற்றவரே சிறப்புடையவராக கருதப்படுவார். ஏனென்றால் மன்னருக்கு தனது நாட்டை விட வேறு இடத்திற்கு சென்றால் சிறப்பில்லை. கற்றறிந்த ஒருவருக்கு செல்கின்ற இடமெல்லாம் சிறப்பே ஆகும். இதுவே கல்வியின் சிறப்பு ஆகும்.
கல்வியின் அவசியம்:
பிச்சை புகினும் கற்கை நன்றே என்கின்றார் அவ்வையார். எவ்வளவு கஷ்டப்பட்டாவது கல்வியை பெற்றுவிட வேண்டு்ம் என்ற கருத்து ஆதிகாலம் தொட்டே வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஒருவரிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அதனை கணக்கு வைத்து கொள்ளவும், நல்ல காரியத்திற்கு பயன்படுத்தவும் கல்வி அறிவு மிக அவசியம். ஒரு வீட்டில் உள்ள வறுமையை போக்கவும், நாட்டை அபிவிருத்தி செய்யவும் கல்வி அறிவு மிக முக்கியம் ஆகும்.
கல்வியால் உயர்ந்தவர்கள்:
சிறந்த கல்வி ஒரு மனிதனை உயர்ந்த இடத்திற்கு இட்டு செல்லும். இந்த உலகத்தில் கல்வியால் உயர்ந்தவர்கள் பலரை உதாரணமாக குறிப்பிடலாம். அதில் டாக்டர் அப்துல்கலாம், அரிஸ்டாட்டில், அம்பேத்கர், ஆபிரகாம் லிங்கன் , பிளாட்டோ மற்றும் சாக்கிரட்டீஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். உலகின் முதலாவது தந்துவஞானியாக போற்றப்படுகின்ற சாக்கிரட்டீஸ், அவர் நஞ்சூட்டப்படும் வரை புத்தகங்களை அவர் கற்ற கல்வி தான் அவரை அறிவியலாளராக மாற்றியது.பழம்பெரும் புலவரான அவ்வையார் தமிழ்கல்வி மீது புலமை கொண்டமையே அவரை இன்றளவும் தமிழ் உலகம் நினைவு வைத்திருக்க காரணமாகிறது.
கல்வியின் பயன்கள்:
கல்வி ஒரு மனிதனை முழுமையானவன் ஆக்குகின்றது. கல்வியானது கள்வளர்களால் திருட முடியாத நிலையாக வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடிய ஒரு செல்வமாகும். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்கின்றது ஆத்திசூடி. அதாவது இளமையில் கல்வியை நன்றாக கற்கும் போது அக்கல்வியானது நம்மை உயரிய இடத்திற்கு இட்டு செல்லும். உயர்ந்த பதவிகளை பெற்று தரும்.
முடிவுரை:
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக என்கின்றது திருக்குறள். நாம் ெவறுமனே கல்வியை கற்றால் மட்டும் போதுமானது அல்ல. கற்ற கல்விக்கேற்ப வாழ்க்கையில் நாம் உழைக்க வேண்டும். நாம் பெற்ற கல்வியை அனைவருடனும் பகிர்ந்து மற்றவர்களும் வாழ வழிவகை செய்ய வேண்டும். கல்வியினை பெறுதல் ஒவ்வொருவரின் பிறப்புரிமை ஆகும்.