'விளம்பரம்' வளர்ந்த விதம்...!
இன்றைய காலகட்டத்தை ‘விளம்பர யுகம்’ எனலாம். இன்று விளம்பரப்படுத்தாத பொருட்களே இல்லை.
பழங்காலத்திலிருந்தே விளம்பரம் அவசியம் என்று உணர்ந்திருக்கிறான் மனிதன். இன்றைய காலகட்டத்தை 'விளம்பர யுகம்' எனலாம். இன்று விளம்பரப்படுத்தாத பொருட்களே இல்லை. விளம்பர யுக்திகளும் பெருகிவிட்டன. எல்லா நிறுவனங்களிலும் விளம்பரப் பிரிவு தனியாகச் செயல்பட்டு வருகிறது.
* கி.மு 1500-களில் எகிப்தில் முக்கிய கடைகளின் வாசல்களில், என்னென்ன பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றன என்று குறிப்பிட்டு போர்டுகள் வைத்திருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இதுதான் உலகின் முதல் விளம்பரம்.
* அச்சுக்கலை அறிமுகமானபின், விளம்பரத்தில் புரட்சி ஏற்பட்டது. கி.பி 1476-ம் ஆண்டு லண்டனில் முதன்முதலாக பிரார்த்தனை புத்தகம் ஒன்றைப் பற்றிய விளம்பரம், துண்டுப் பிரசுரங்களாக வெளியானது. இதனால் அந்தப் புத்தகம் ஒரு வாரத்தில் விற்றுத் தீர்ந்து விட்டதாம்.
* கி.பி 1625-ல் லண்டனிலிருந்து வெளிவந்த செய்தித்தாள் ஒன்றின் கடைசிப் பக்கம் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்டு, பல துறைகளிலிருந்தும் விளம்பரங்கள் வந்தனவாம். 1771-ம் ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலில் பத்திரிகைகளில் விளம்பரம் வெளி வரத் தொடங்கியது.
* பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து செய்தித்தாள் மட்டுமின்றி, வார, மாத இதழ்கள், வானொலி, டெலிவிஷன் ஆகியவற்றிலும் விளம்பரங்கள் பரவின. 1920-ம் ஆண்டுதான் வானொலிகளில் வர்த்தக விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. இந்தியாவில் 'விவித பாரதி வர்த்தக ஒலிபரப்பு' 1967-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்டது. தொலைக்காட்சிகளில் 1976-ம் ஆண்டு ஜனவரி 4 முதல் விளம்பரங்கள் வருகின்றன. அது இன்று வரை கொடி கட்டிப் பறக்கிறது.