முதல் அணுகுண்டு சோதனை..!


முதல் அணுகுண்டு சோதனை..!
x

உலகின் முதல் அணுகுண்டு நியூ மெக்ஸிகோவில் ஒரு காட்டுப் பகுதியில் நூறு அடி உயரமுள்ள எஃகு கோபுரத்தில் பொருத்தப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின் போது பெரியதும், சின்னதுமாக இரண்டு அணுகுண்டுகள் ஜப்பான் நாட்டை அழித்த கதை நமக்கு தெரிந்திருக்கும். ஆனால், உலகமே கண்டு அஞ்சிய அணுகுண்டு தாக்குதல் எப்படி இருக்கும் என நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் வரலாற்று தகவல்களில் இருந்து, அணுகுண்டு சோதனை நிகழ்வை தொகுத்திருக்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1945-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி காலை 5.30 மணிக்கு உலகின் முதல் அணுகுண்டு நியூ மெக்ஸிகோவில் ஒரு காட்டுப் பகுதியில் நூறு அடி உயரமுள்ள எஃகு கோபுரத்தில் பொருத்தப்பட்டது. அதை வெடிக்கச் செய்வதற்கான விசை சுமார் ஆறு மைல்களுக்கு அப்பாலுள்ள ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

'டிரினிடி' எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த இந்த அணுகுண்டு பரிசோதனை அதிகாலை நேரத்தில் நிகழ்த்தப்பட்டது. அணுகுண்டு வெடித்தபோது பல சூரியன்கள் ஒரே சமயத்தில் சேர்ந்து பிரகாசிப்பது போன்ற வெளிச்சம் ஏற்பட்டது. அந்த வெளிச்சம் சுமார் 250 மைல்களுக்கு அப்பாலும் தெரிந்தது. அந்த வெளிச்சத்தை பார்த்தவர்கள் சில மணி நேரம் பார்வைஇழந்தவர்கள் போன்று கண் பார்வை இழந்து தவித்தார்கள். பல வண்ணங்கள் கலந்த பயங்கரமான அழகான நெருப்புக் கோளம் ஒரு மைல் தூரம் வரை பூமியின் மீது கவிழ்ந்து கொண்டிருந்தது. பூமி ஆடியது.

குண்டு பொருத்தப்பட்டிருந்த எஃகு கோபுரம் உருகி ஆவியாகிவிட்டது. ஒரு வெண்ணிறப் புகை மண்டலம் குடை உருவத்தில் கிளம்பி எழுந்து உயரே 40 ஆயிரம் அடி தூரம் சென்றது. சுற்று வட்டார மக்கள் மிகப்பெரிய இடி இடித்து மிகப்பெரிய மின்னல் வெட்டியது என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதிகாரிகளோ அணுகுண்டு ரகசியம் வெளியாவதை விரும்பவில்லை. ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதில், 'வெடி மருந்து கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது' என்று பொய்யான தகவலை தெரிவித்தனர்.


Next Story