ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; 64 பேர் கைது


ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்; 64 பேர் கைது
x

ஈரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 64 பேரை போலீசார் கைது செய்தனா்.

ஈரோடு

ஈரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 64 பேரை போலீசார் கைது செய்தனா்.

மறியல் போராட்டம்

விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்டார செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் கட்சியினர் காளை மாட்டு சிலை பகுதியில் நேற்று காலை திரண்டனர். இந்த போராட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். மத்திய தணிக்கை அறிக்கையின்படி ஊழல் குற்றச்சாட்டின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் கலவரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

64 பேர் கைது

அங்கிருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் செய்வதற்காக ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலையிலேயே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். இதில் மொத்தம் 64 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதேபோல் பவானியில் 70 பேர், ஜம்பையில் 136 பேர், கோபியில் 150 பேர், சத்தியமங்கலத்தில் 88 பேர், பவானிசாகரில் 128 பேர் என மாவட்டம் முழுவதும் 636 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story