புகைப்பதை நிறுத்தினால் கிடைக்கும் பலன்கள்
முயற்சி எடுத்து புகைப்பதை கைவிட்டால் அடுத்தடுத்து கிடைக்கும் பலன்கள், உங்களுக்குப் பெரும் நம்பிக்கை அளிக்கக்கூடும். ஒருவர் புகைப்பதை நிறுத்திய நிமிடத்தில் இருந்து உடல் எப்படி எல்லாம் மீட்டெடுக்கப்படுகிறது என தெரியுமா?
20 நிமிடங்களில் ரத்த அழுத்தம் இயல்பாகும். இதயத்துடிப்பு இயல்பாகும். 8 மணி நேரத்தில் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கார்பன் மோனாக்சைடு உடலில் இருந்து வெளியேறும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்புக்குத் திரும்பும்; அதனால் உடல் சக்தி முன்பைவிட மேம்பட்டு இருக்கும். 2 நாட்களில் நரம்புமுனைகள் திரும்ப வளர ஆரம்பிக்கும். நாக்கின் சுவை மொட்டுகளில், மணங்களை உணரும் தன்மை அதிகரிக்கும்; அதனால் உணவின் சுவை முன்பைவிட மேம்பட்டு இருக்கும்.
2 முதல் 12 வார இடைவெளியில் தோல் பளபளப்பாகும். ரத்த ஓட்டம் முன்ைபவிட சிறப்பாக இருக்கும்.. சுவாசமும் நுரையீரல் செயல்பாடும் நன்றாக இருக்கும். நாளடைவில் இருமல் குறையும். மூச்சிளைப்பு குறையும். உடல் சக்தி குறிப்பிடத்தக்க அளவு மேம்படும். நுரையீரலின் சுயசுத்தம் செய்துகொள்ளும் தன்மை அதிகமாகும். நோய்த்தொற்று ஏற்படும் தன்மை குறையும்.
புகைபிடிக்கும்போது இதயக்கோளாறு ஏற்படுவதற்கு இருந்த ஆபத்து நாளடைவில் குறையும். பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியம் வெகுவாக குறையும். வாய், தொண்டை, உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும். ஆயுட்காலம் அதிகமாகும்.