'பெல் ராக்' லைட் ஹவுஸ்
உலகிலேயே மிகவும் பழமையான கலங்கரை விளக்கம் ‘பெல் ராக்’ லைட் ஹவுஸ் ஸ்காட்லாந்தில் உள்ளது.
கலங்கரை விளக்கத்தைப் பார்த்திருப்போம். அதன் உச்சிக்குப் போய் கடலின் அழகை ரசித்தும் இருப்போம். சரி, உலகிலேயே மிகவும் பழமையான கலங்கரை விளக்கம் எங்கு உள்ளது தெரியுமா?
ஸ்காட்லாந்தில்...! அதுவும் இந்த கலங்கரை விளக்கம் கடலுக்கு உள்ளேயே உள்ளது. அங்கஸ் என்ற கடற்கரைப் பகுதியில் உள்ள இந்தக் கலங்கரை விளக்கத்தின் பெயர் 'பெல் ராக் லைட் ஹவுஸ்'.
1807 முதல் 1810-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது., 1813-ம் ஆண்டு இது செயல்பட தொடங்கியது. ஆர்போர் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு வழிகாட்ட அந்த காலத்தில் மிகுந்த சிரமத்துக்கு இடையே இதை அமைத்து இருக்கிறார்கள். 35 மீட்டர் உயரமுள்ள இந்தக் கலங்கரை விளக்கத்தின் ஒளியை கடலில் 56 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே பார்க்க முடியுமாம்.
எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத அந்தக்காலத்தில் கட்டப்பட்ட இந்த கலங்கரை விளக்கம் உலக அதிசயத்தில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. ஆமாம், உலகில் தொழில் ரீதியாக வகைப்படுத்தப்பட்ட அதிசயங்களில் இதுவும் ஒன்று.
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளுக்கு நடுவே கம்பீரமாக காட்சிதரும் இந்த கலங்கரை விளக்கம், தற்போதும் அப்படியே உள்ளது. ஆனால், இதை அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் அருங்காட்சியமாக மாற்றிவிட்டார்கள். ஸ்காட்லாந்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் மறக்காமல் சென்று பார்க்கும் இடங்களில், 'பெல் ராக்' லைட் ஹவுஸ் முதல் இடம் பிடித்துள்ளது.