வித்தியாசமான 'வில்லேஜ்'!
உலகில் இருக்கும் வித்தியாசமான கிராமங்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
1. மழை-மலை கிராமம்
கின்னஸ் சாதனையின்படி, உலகில் மிக அதிகமாக மழை பெய்யும் இடமாக மேகாலயாவில் உள்ள மாசின்ரம் (Mawsynram) கிராமம் திகழ்கிறது. வருடம் முழுவதும் மழை பொழிவதால், இங்குள்ள காசி இனமக்கள் மூங்கில் மற்றும் வாழையிலையைப் பயன்படுத்தி ஆளுயரக் குடையுடன் வலம் வருகின்றனர். மேலும் மலைகளுக்கிடையே கடக்க ரப்பர் மரங்களின் வேர்களைப் பின்னி இயற்கைப் பாலத்தையும் இவர்கள் ஆங்காங்கே உருவாக்கியுள்ளனர்.
2. குங்பூ கிராமம்
மத்திய சீனாவில் உள்ள தியான்சு மலைப்பகுதியில் உள்ளது கங்ஷி டாங்க் (Ganxi Dong) கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் குங்பூ உள்ளிட்ட சீனாவின் பழங்காலத் தற்காப்புக் கலைகள் பலவற்றில் கைதேர்ந்தவர்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே அனைவரும் தற்காப்புக்கலை கற்பது இங்கு காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
மலைப்பகுதியில் இந்தக் கிராமம் அமைந்துள்ளதால் வனவிலங்குகளிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும் தற்காத்துக்கொள்வதற்காக தற்காப்புக்கலை கற்றுத் தரப்படுவதாகக் கூறப்படுகிறது.
3. சாலையே இல்லாத கிராமம்
'நெதர்லாந்தின் வெனிஸ்' என்றழைக்கப்படுகிறது கீத்தூர்ன் (Giethoorn) கிராமம். இந்தக் கிராமத்தில் சாலைகளே கிடையாது. கார்கள் அனைத்தும் கிராமத்திற்கு வெளியில்தான் நிற்க வேண்டும். கிராமம் முழுக்க நான்கு கிலோமீட்டர் தூரமுள்ள கால்வாய் ஓடுகிறது. குட்டி குட்டித் தீவுகள் அடங்கிய இந்தக் கிராமத்தில் 180-க்கும் மேற்பட்ட அழகான பாலங்கள் உள்ளன. இவற்றின் வழியாகவும், சிறிய படகுகள் வழியாகவும் மட்டுமே இந்தக் கிராமத்தில் பயணிக்க முடியும்.
வெனிஸ் நகருக்கு நிகரான அழகுடன் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக இது கருதப்படுகிறது.
4. இரண்டு சூரிய கிராமம்
இத்தாலியில் இரண்டு மலைகளுக்கு இடையில் உள்ள பள்ளத்தாக்கில் உள்ளது விகனெல்லா (Viganella) கிராமம். மலையின் உயரம் காரணமாக நவம்பர் முதல் பிப்ரவரி வரை பனிக்காலத்தில் இந்தக் கிராமத்தில் பல நூற்றாண்டுகளாக சூரிய ஒளி விழுவதில்லை. 2006-ம் ஆண்டு இக்கிராமத்தைச் சேர்ந்த என்ஜினீயர் ஒருவரும், டிசைனரும் இணைந்து இதற்கு ஒரு மாற்றைக் கண்டுபிடித்தனர். அருகே இருக்கும் மலை ஒன்றில் பிரமாண்ட கண்ணாடி தொகுப்புகளை பொருத்தி, சூரிய ஒளியை ஊருக்குள் பிரதிபலிக்கும்படி செய்தனர். 185 குடும்பங்கள் வசிக்கும் அந்தக் கிராமத்திற்கு தற்போது இதனால் இரண்டு சூரியன்கள்.
இத்தாலி திரைத்துறையினரின் ஷூட்டிங் ஸ்பாட்டாக இந்தக் கிராமம் தற்போது மாறியுள்ளது.