அரிசியும், அமெரிக்காவும்..!


அரிசியும், அமெரிக்காவும்..!
x

கல்வெட்டு பழக்கம்கூட இல்லாத காலகட்டத்திலேயே நெல்‌ பயிரிடப்பட்டிருக்கிறது. இந்தியா, தாய்லாந்து, ஜப்பான்‌, சீனா என்று பல நாடுகள்‌ இதற்கு சொந்தம்‌ கொண்டாடுகின்றன.

உணவுகளில் சாதம்தான் நமக்கு சகலமும் என்ற நிலை இன்றும் நீடித்துக் கொண்டி௫க்கிறது. கல்யாண வீடுகளில் பத்து கூட்டுகளோடு சாதத்தை ஒரு கட்டுக் கட்டுகிறோம். கேரளாவில் ஓணத்திருநாளில் 21 வகை கூட்டு, 5 வகை பாயசங்களோடு 'ஓண சத்யா' சாப்பிடுகிறோம். அதிலும் சாதம்தான் பிரதானம்.

சாதத்திற்கான நெல், முதலில் உலகில் எங்கே பயிரிடப்பட்டது என்ற வரலாற்றைத் தேடினால், ஆச்சரியமான தகவல்கள் நிறைய கிடைக்கின்றன. கல்வெட்டு பழக்கம்கூட இல்லாத காலகட்டத்திலேயே நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அதன் தோற்றம் இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், சீனா என்று பல நாடுகள் இதற்கு சொந்தம் கொண்டாடுகின்றன. அந்த நாடுகளெல்லாம் சொந்தம் கொண்டாடப் பலவிதமான கிராமிய நெல் கதைகளை சொல்லிக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் நெல் நுழைந்ததற்கும் ஒரு கதை இருக்கிறது. அது இன்றிலிருந்து 250 ஆண்டுகளுக்கு முந்தைய கதை. பிரபலமான கப்பல் மாலுமி ஒருவர் பல நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டார். ஜப்பானை அவர் தொட்டபோது, ஒரு மூட்டை விதை நெல் கிடைத்திருக்கிறது. அதை அவருக்கு கொடுத்த விவசாயி, "இது எங்களுக்கு மிகவும் பிடித்த உணவுப் பயிர். இதனை கொண்டு போய் உங்கள் நாட்டு விவசாயிகளிடம் கொடுத்து விதைத்து, பயிரிட்டு, அறுவடை செய்து உண்டு மகிழுங்கள்'' என்று கூறியிருக்கிறார்.

மகிழ்ச்சியுடன் அந்த நெல் மூட்டையை பெற்றுக்கொண்ட மாலுமி, அடுத்து பிரேசிலை நோக்கி பயணித்திருக்கிறார். அமெரிக்காவின் தெற்கு கரோலினா கடற்பகுதியை அவரது கப்பல் கடந்துகொண்டிருந்தபோது பெரும் புயல் அடித்திருக்கிறது. அது கப்பலையே மூழ்கடித்துவிடும் என்ற அபாயநிலை உருவானபோது, அவர் பயந்துபோய் தான் நம்பும் கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்கிறார். 'இந்த பேய்க்காற்றில் என் கப்பல் மூழ்காமல் இருந்தால், அதற்கு நன்றிக்கடனாக என்னிடம் இருக்கும் இந்த விதை நெல் மூட்டையை தெற்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு விவசாயியிடம் கொடுத்துவிட்டு செல்வேன்'' என்று வேண்டிக்கொண்டாராம். அதன் பின்பு பேய்க்காற்று குறைந்து, இயல்புநிலை திரும்பி கப்பல் தெற்கு கரோலினா துறைமுகத்தில் ஒதுங்கியிருக்கிறது. உடனே அவர் கடவுளுக்கு கொடுத்த வாக்குப்படி நெல் மூட்டையை தூக்கிக்கொண்டு கீழே இறங்கி, சார்ல்ஸ்டன் என்ற நகரப் பகுதியை சேர்ந்த விவசாயியிடம் அதனை கொடுத்து, இது புதியவகை விதை. இதைப் பயிரிட்டு, விளைவித்து ஊருக்கே சோறிடுங்கள் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். இந்த கதைக்கு வலுசேர்க்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள அந்த சார்ல்ஸ்டன் நகரில் இப்போதும் பல்லாயிரம் ஹெக்டேர் நிலத்தில் நெல் பயிரிடுகிறார்கள். பெருமளவில் நெல் விளைவித்து, நவீன ஆலைகள் மூலம் அரிசியாக்கி ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறார்கள். இதுபோல் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் நெல் பயிரிட்டதற்கான ஆதிகால கதைகள் உள்ளன. அங்கும் ஏராளமான விவசாயிகள் நெல் பயிரிடுகிறார்கள். பல நாடுகள் கதை புனைந்து நெல்லுக்கு சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், உலக அளவில் ஆசிய நாடுகள்தான் இதன் உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. உலக அரிசி உற்பத்தியில் 90 சதவிகிதம் ஆசியாவில்தான் தயாராகிறது. அதை சமைத்து சூடு ஆறாமல் சுவைத்து மகிழ்வதும் ஆசியர்கள்தான். இதில் இருக்கும் ருசிகரமான உண்மை என்ன தெரியுமா..? நெல்லுக்கு சொந்தம் கொண்டாடும் பல நாட்டினர் வெறும் சாதத்தை அப்படியே பயன்படுத்திக்கொண்டிருக்க நாம் பத்து வகை பொங்கல், இருபது வகை இட்லி, முப்பது வகை புட்டு, ஐம்பது வகை தோசை, அறுபது வகை சாதம் என்று சுடச்சுடச் சுவைத்துக்கொண்டிருக்கிறோம்.

அடிமைகள் விளைவித்த அரிசி

இந்த மாலுமி கதையை போலவே, மற்றொரு கதையும் பிரபலம். ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களை கொண்டு, தெற்கு கரோலினா பகுதியில் அரிசி விளைவித்ததாகவும், அப்படிதான் அமெரிக்காவில் அரிசி விவசாய வரலாறு எழுதப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

அசைவ உணவு சுவைத்தது எப்படி..?

தீவிபத்துதான் காரணமாக இருந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதாவது, ''பசு தனது கன்றுக்குப் பால் கொடுப்பதை பார்த்த மனிதன் தானும் அதை சுவைத்து, பாலின் சுவையை அறிந்திருப்பான். கோழி இனப்பெருக்கத்திற்காக இட்ட முட்டைகளை சுவைத்த மனிதன் அதன் ருசிக்கும் அடிமையாகியிருப்பான். இப்படி ஆடு, மாடு, கோழிகளை அவன் தன் தேவைகளுக்காக வளர்த்து வந்த நிலையில், ஒருமுறை தீவிபத்து ஏற்பட்டு அத்தனையும் அரைகுறையாகக் கருகியிருக்கும். அப்போது கவலையோடு அவைகளை அப்புறப்படுத்திய மனிதர்களில் யாராவது ஒருவர், அனிச்சை செயலாய் தன் விரல்களை வாய்க்கு கொண்டு சென்றிருக்கலாம். அவரது கையில் ஒட்டியிருந்த வெந்த கறித்துண்டு அவர் நாக்கில் பட்டு சுவையை உணரவைத்திருக்கும். பின்பு அவர் அந்த சுவையைத் தனது கூட்டத்தினருக்கு எடுத்துச்சொல்லியிருப்பார். அவர்கள் தீயை உருவாக்கி அதில் கால்நடைகளின் தசைப் பகுதிகளை வேகவைத்து சூடாக சுவைத்திருப்பார்கள்"... இப்படித்தான் நீண்டு போகிறது அசைவத்தின் ஆரம்ப வரலாறு.


Next Story