பிறந்த கன்றுக்குட்டியை பராமரிப்பது எப்படி?


பிறந்த கன்றுக்குட்டியை பராமரிப்பது எப்படி?
x

பிறந்த பச்சிளம்கன்றுகளை சிரத்தையுடன் பராமரிக்கும் போதுதான் கன்றுகள் நல்ல முறையில், ஆரோக்கியத்துடன் வளர்ந்து அதிக பால் தரும் பசுவாக உருவாகும்.

பிறந்தவுடன் பராமரிப்பு

கன்று ஈன்றவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கி சுத்தம் செய்துவிடும். அப்படி செய்யவில்லை என்றால் சுத்தமான துணியை கொண்டு அல்லது வைக்கோலை சுருட்டிகொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும்.

மூச்சு திணறும்போது கன்றின் மூக்கில் சளியை எடுத்துவிட்டு மார்பகத்தை சற்று அழுத்தி விட்டால் மூச்சு திரும்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்துவிடும்.

தொப்புள் கொடி

தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினால் இறுக கட்டிவிட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு சுத்தமான கத்தரிக்கோலை கொண்டு தொப்புள் கொடியை கத்தரித்து விட வேண்டும். கத்தரித்த இடத்தில் புண் ஏற்படாமல் இருக்கவும், கொசு, ஈ போன்றவை தொல்லை கொடுக்காமல் இருக்கவும் உடனே டிங்சர் அயோடின் அல்லது பொவிடோன் அயோடின் என்ற கிருமிநாசினி மருந்தை தடவி விட வேண்டும். இல்லை என்றால் இதன் மூலம் கிருமிகள் உள்ளே சென்று கன்றுகளின் உடல்நிலையை பாதித்து விடும்.

சீம்பாலின் முக்கியத்துவம்

கன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல்கட்ட சீம்பாலும், 10 முதல் 12 மணி நேரம் கழித்து 2-வது கட்ட சீம்பாலும் கொடுக்க வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் சீம்பால் என்பது கன்றுகளுக்கு நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் ஒரு கொடையாகும். மேலும் சீம்பால் கன்றுகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கும். சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்பு சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாது உப்புக்கள், இம்முனோகிளாபுலின் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை உள்ளன.

கன்றுகளுக்கு தீவனம்

பிறந்த 2 அல்லது 3 வாரத்தில் கன்றுகள் பசும்புற்களையும், தீவன கலவையையும் தின்னத்தொடங்கும். மக்காச்சோளம் 30 பாகம், கேழ்வரகு 20 பாகம், உடைந்த அரிசி 10 பாகம், கோதுமை தவிடு 10 பாகம், கடலை பிண்ணாக்கு 27 பாகம் மற்றும் தாது உப்புக்கலவை 3 பாகம் என்ற அளவில் கலந்து கன்று தீவனம் தயாரிக்கலாம். இந்த தீவன கலவையுடன் சாதாரண உப்பு 25 கிராம் சேர்க்கலாம். கன்று தீவனத்துடன் குதிரை மசால், காய்ந்த புல் போன்றவற்றையும் கொடுக்கலாம்.

தடுப்பூசி போடுதல்

கன்றுகளுக்கு 4 மாதம் ஆனதும் தடுப்பூசி போட வேண்டும். கோமாரி, அடைப்பான், தொண்டை அடைப்பான், சப்பை போன்ற நோய்களுக்கு கால்நடை டாக்டரின் ஆலோசனையின்படி தடுப்பூசிகள் போடுதல் அவசியம். கன்றுகளுக்கு பிறந்த ஒரு வாரத்தில் குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும். பின் மாதம் ஒரு முறை என 6 மாதம் வரையிலும், பிறகு 3 மாதத்திற்கு ஒரு முறையும், ஒரு வயதிற்கு மேல் 6 மாதத்திற்கு ஒரு முறையும் கால்நடை டாக்டரின் உதவியுடன் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும்.


Next Story