900 குழந்தைகளுக்கு தந்தை..!
என்னது..! 900 குழந்தைகளுக்கு தந்தையா..? என மிரண்டுவிடாதீர்கள். இந்த தலைப்பிற்கும், செய்திக்கும் சம்பந்தப்பட்ட நபர் இங்கிலாந்தின் 'நம்பர்-1' ஸ்பெர்ம் டோனர். குழந்தை இல்லாத தம்பதிகளுக்காக உயிரணுக்களை ஆன்லைனில் விற்கும் இவர் பெயர் சைமன் வாட்சன். பதினைந்து வருடங்களுக்கு மேலாக உயிரணுக்களை விற்பனை செய்து வரும் சைமன், 30 லட்ச ரூபாய் வரை வருமானம் பார்த்திருக்கிறார். ஒருமுறை உயிரணுக்களைத் தர 3,500 ரூபாயைக் கட்டணமாக வசூலிக்கிறார்.
''எனக்கு 45 வயதாகிறது. இன்றும் என் உயிரணுவுக்கு குழந்தையை உருவாக்கும் திறன் மிக வலுவாக இருக்கிறது. வருடத்துக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் இதை நான் உறுதி செய்துகொள்கிறேன். அந்த ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவு முறையைக் கடைப்பிடிக்கிறேன். எந்த உயிரணு வங்கிக்கும் நான் போவதில்லை. பேஸ்புக் பக்கத்தில் மட்டுமே விளம்பரம் செய்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் வந்து வாங்கிச் செல்கிறார்கள்...!'' என்று கூலாகச் சொல்லும் சைமன் இருமுறை மணமானவர்.
முதல் மனைவி மூலம் இரண்டு மகன்களும், இரண்டாவது மனைவிக்கு ஒரு மகளும் இருக்கிறார்கள்.
''என் குழந்தைகள் என் செய்கையைத் தப்பாக எடுத்துக் கொள்வதில்லை. என் முதல் மனைவியைப் பிரிந்த பிறகுதான் நான் இந்தத் தொழிலில் இறங்கினேன். அதன் பிறகு இரண்டாவது மனைவி உட்பட எந்தப் பெண்ணும் இதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை...!'' என்கிற சைமனுக்கு, சமீபத்திய கேர்ள் ப்ரெண்டுடன் 'பிரேக்-அப்' ஆகிவிட்டது. காரணம், இந்தத் தொழில்தான்.
''என்னிடம் உயிரணுக்கள் வாங்கிச் செல்பவர்களில் பலரும் அதன் பின்பு தொடர்பு கொள்வதில்லை. வாரிசு பிரச்சினை வரக்கூடாது என விலகி விடுகிறார்கள். சிலர்தான் கர்ப்பமானதையும், குழந்தை பிறந்ததையும் தெரிவிக்கிறார்கள். ஒரு தம்பதிக்கு என் உயிரணு மூலம் இரட்டையர் கூடப் பிறந்திருக்கிறது.
எனக்குத் தெரிந்து என் குழந்தைகளின் எண்ணிக்கை 900. தெரியாமல் நிறைய இருக்கலாம். என் கணக்குப்படி வாரம் ஒரு முறையாவது நான் ஒருகுழந்தைக்குத் தகப்பனாகிக் கொண்டிருக்கிறேன்...!'' என்ற சைமன் இப்போது உயிரணுக்களை விற்பதில்லை. ஆனால், இவர் மூலம் உத்வேகம் ஆன நூற்றுக்கணக்கான ஐரோப்பிய இளைஞர்கள் சைமன் தொழிலை நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.