பார்முலா 4 கார் பந்தயம்: தமிழ்நாட்டுக்கு விளையாட்டுத் துறையில் தனி இடத்தை பெற்று தரும் - உதயநிதி ஸ்டாலின்
பார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாட்டுக்கு விளையாட்டுத் துறையில் தனி இடத்தை பெற்று தரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் பந்தய பாதை அமைந்துள்ளது. இதையொட்டி சாலையின் இரு புறமும் தடுப்பு சுவருடன், கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் தற்போது தொடங்கி உள்ளது. பயிற்சி போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இரவு 7 மணிக்கு தொடங்கிய கார் பந்தய பயிற்சி போட்டிகள் இரவு 10.45 மணிக்கு நிறைவடைகிறது. நாளை கார் பந்தய போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், பார்முலா 4 கார் பந்தயம்: தமிழ்நாட்டுக்கு விளையாட்டுத் துறையில் தனி இடத்தை பெற்று தரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பங்களிப்புடன் நடத்தப்படுகிற பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னைத் தீவுத்திடலில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தேன்.
அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி முறையான பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் நடைபெறுகின்ற இந்த சர்வதேச அளவிலானப் போட்டியை காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் கார் பந்தய ஆர்வலர்கள் திரண்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். இதில் பங்கேற்கும் கார் பந்தய வீரர்களை வாழ்த்தினோம்.
முன்னதாக, கார் பந்தய வீரர்கள் திறம்பட நிகழ்த்திய சாகசங்களை கண்டு மகிழ்ந்தோம். தெற்காசியாவில் முதன்முதலில் நடைபெறும் இந்த பார்முலா 4 கார் பந்தய போட்டி, உலகளவில் இந்தியாவுக்கும் - தமிழ்நாட்டுக்கும் விளையாட்டுத் துறையில் தனி இடத்தைப் பெற்றுத்தரப் போவது உறுதி.என தெரிவித்துள்ளார்.