பாரீஸ் ஒலிம்பிக்: ஹாட்ரிக் சாதனை படைப்பாரா? பி.வி. சிந்து


பாரீஸ் ஒலிம்பிக்: ஹாட்ரிக் சாதனை படைப்பாரா? பி.வி. சிந்து
x

கோப்புப்படம்

தினத்தந்தி 9 July 2024 7:55 PM IST (Updated: 16 July 2024 5:21 PM IST)
t-max-icont-min-icon

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரீஸ் நகரில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.

மும்பை,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரீஸ் நகரில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு தற்போதே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரு ஒலிம்பிக் தொடர்களில் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இம்முறையும் பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பாரா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பி.வி.சிந்து கடந்த 2016ம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கமும், கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

பேட்மிண்டன் தரவரிசையில், முதல் 16 இடங்களை பிடிப்பவர்கள் நேரடியாக பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர். அந்த தரவரிசையில் பி.வி. சிந்து 12ஆவது இடத்தை பிடித்து, பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுள்ளார். பி.வி.சிந்து தற்போதும் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற சந்திப்பின் போது பி.வி.சிந்து பேசும் போது, ஒலிம்பிக்கில் மூன்றாவது முறையாக இந்தியா சார்பில் நான் பங்கேற்க உள்ளேன். 2016 ஒலிம்பிக்கில் நான் வெள்ளி வென்று இருந்தேன். 2020 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருந்தேன். இந்த முறை பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன் என நம்புகிறேன். மீண்டும் ஒரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.

இந்த முறை ஒலிம்பிக்கில் நிறைய அனுபவத்துடன் கலந்து கொள்கிறேன். இந்தியா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இதில் அழுத்தம் இருக்கும். உங்கள் கடின உழைப்பு இங்கு அழைத்து வந்துள்ளது. இதனை மற்றும் ஒரு விளையாட்டு தொடராக எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும். நூறு சதவீத திறனை வெளிப்படுத்தினால் போதுமானது என கூறினார்.


Next Story