கேரம் உலக சாம்பியன்: தமிழக வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு
பரிசுத்தொகையை துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
சென்னை ,
அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை காசிமாவுக்கு ரூ.. 1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது . பரிசுத்தொகையை துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கினார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட நம் திராவிட மாடல் அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற தங்கை காசிமா உட்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை வழங்கி வாழ்த்தி அனுப்பி இருந்தோம்.
வண்ணாரப்பேட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற தங்கை காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்து திரும்பினார்.
அவரைப்போலவே, தங்கை மித்ரா 2 தங்கம், தங்கை நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்று நாடு திரும்பிய போதே அவர்களை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினோம். அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகையை வழங்குவோம் என்று அறிவித்தோம்.
தங்கை எம்.காசிமா -க்கு ரூ.1 கோடி, தங்கை வி.மித்ரா -க்கு ரூ.50 லட்சம், தங்கை கே.நாகஜோதி -க்கு ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகையாக இன்று நேரில் வழங்கி மகிழ்ந்தோம்.தங்கைகள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் கழக அரசு துணை நிற்கும். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்.என தெரிவித்துள்ளார் .