'அவருடைய வலி எனக்கு புரிகிறது' - வினேஷ் போகத்துக்கு ஜப்பான் மல்யுத்த வீரர் ஆதரவு


அவருடைய வலி எனக்கு புரிகிறது - வினேஷ் போகத்துக்கு ஜப்பான் மல்யுத்த வீரர் ஆதரவு
x

வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜப்பான் மல்யுத்த வீரர் ரே ஹிகுச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.

டோக்கியோ,

பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் கலந்துகொண்டார். தனது அபார திறமையால் அடுத்தடுத்து வெற்றிபெற்ற அவர், இறுதிப்போட்டி வரை முன்னேறினார். தங்கப்பதக்கத்துக்காக காத்திருந்த அவர், 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இது அவருக்கு பேரிடியாக அமைந்த நிலையில், இந்திய ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவருக்கு தற்போது அனைத்து தரப்பினரும் ஆதரவும், புகழாரம் சூட்டியும் வருகின்றனர். தற்போது, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.

வினேஷ் போகத்துக்கு ஏற்பட்டுள்ள இதே நிலைமை, கடந்த முறை ஒலிம்பிக்கின்போது ஜப்பானின் ரே ஹிகுச்சிக்கு ஏற்பட்டிருந்தது. கடந்த முறை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்றபோது, வெறும் 50 கிராம் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக, ரே ஹிகுச்சி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜப்பான் மல்யுத்த வீரர் ரே ஹிகுச்சி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;

"நீங்கள் எந்த அளவுக்கு வலியை உணருகிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கும் இதேபோலத்தான்.. 50 கிராமுக்காக நடந்தது. உங்களைச் சுற்றி பேசுபவர்கள் குறித்து கவலைப்பட வேண்டாம். வாழ்க்கை ஒரு தொடர் பயணம். 'வீழ்ச்சியிலிருந்து எழுவதே மிக அழகான விஷயம்..' நன்றாக ஓய்வெடுங்கள்."

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story