பாரீஸ் ஒலிம்பிக்: வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி


பாரீஸ் ஒலிம்பிக்: வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 14 Aug 2024 4:24 PM GMT (Updated: 14 Aug 2024 4:27 PM GMT)

இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பாரீஸ்,

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் உடல் எடை கூடியதாக கூறி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத், மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனிடையே இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.

இதையடுத்து, வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது. தொடர்ந்து வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரித்தார். வினேஷ் போகத் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரிய மனுவை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (சி.ஏ.எஸ்.) தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக ஆகஸ்ட் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனவும், இந்த விவகாரம் தெளிவற்ற விதிகள் பற்றிய தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது எனவும் இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.


Next Story