வினேஷ் போகத் மனு தள்ளுபடி; மேல்முறையீடு செய்யப்படும் - இந்திய ஒலிம்பிக் சங்க வழக்கறிஞர்


வினேஷ் போகத் மனு தள்ளுபடி; மேல்முறையீடு செய்யப்படும் - இந்திய ஒலிம்பிக் சங்க வழக்கறிஞர்
x

கோப்புப்படம்

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

பாரீஸ்,

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நம்பர் ஒன் வீராங்கனை ஜப்பானின் யு சுசாகி உள்பட 3 வீராங்கனைகளை ஒரே நாளில் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்கு குறைந்த பட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகி இருந்தது. இறுதி சுற்றுக்கு முன்பாக அவரது உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ உடல் எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பது தெரிய வந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது பதக்க வாய்ப்பு பறிபோனது.

அனைத்து தரப்பினரும் வினேஷ் போகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச மல்யுத்த சம்மேளனத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சர்ச்சைக்குரிய தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத், பாரீசில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் அப்பீல் செய்தார். அதில், இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வரை சரியான எடையுடன் போட்டிகளில் பங்கேற்றதால் வெள்ளிப்பதக்கத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

வினேஷ் போகத் தரப்பில் காணொலி வாயிலாக பிரபல வக்கீல்கள் ஹரிஷ் சால்வே, விதுஷ்பத் சிங்கானியா ஆகியோர் ஆஜராகி, 'முதல் நாள் போட்டியில் அவரது உடல் எடை விதிமுறைக்குட்பட்டே இருந்தது. தொடர்ந்து விளையாடியதால் ஏற்பட்ட தளர்வில் இருந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும்போது இயற்கையாகவே ஏற்படும் மாற்றத்தால் உடல் எடை கூடியதே தவிர, அவர் இதில் மோசடி செய்யவில்லை. உடலுக்கு தேவையான குறைந்தபட்ச உணவு எடுத்துக் கொள்வது வீரர், வீராங்கனைகளின் அடிப்படை உரிமை. மேலும் கோடைகால வெப்பத்தின் காரணமாக கூடுதல் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். எனவே 100 கிராம் அதிகரித்ததில் எந்த விதிமுறையும் மீறவில்லை. 100 கிராம் எடையின் காரணமாக போட்டியில் அவருக்கு சாதகமான சூழல் அமைந்து விடாது' என்று அவரது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தனர்.

ஆனால் சர்வதேச மல்யுத்த சம்மேளனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'விதிமுறை எல்லோருக்கும் பொதுவானது. இன்று 100 கிராம் கூடுதல் எடைக்கு விலக்கு அளித்தால், இன்னொருவர் 200 கிராம் எடைக்கு இதே போல் சலுகை கேட்பார். இதுவே தொடர்கதையாகி விடும். அடிப்படை விதிமுறைப்படி தான் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அனபெல் பெனட் (ஆஸ்திரேலியா) இரண்டு முறை தீர்ப்பை தள்ளி வைத்தார். 16-ந்தேதி தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பரபரப்பான இந்த வழக்கின் முடிவு நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. வினேஷ் போகத்தின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் வினேஷ் போகத்தின் பதக்க வாய்ப்பு முற்றிலும் பறிபோனது. இதனால் ஏமாற்றம் அடைந்த இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்த பிரச்சினையில் நியாயம் கிடைக்க மேலும் சட்டப்பூர்வ வாய்ப்புகள் உள்ளதா என ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் வினேஷ் போகத் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்க வழக்கறிஞர் விதுஷ்பத் சிங்கானியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "ஒரே ஒரு வரி உத்தரவுதான் வந்துள்ளது. இதுவரை விரிவான உத்தரவு வரவில்லை. மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது, ஏன் நிராகரிக்கப்பட்டது அல்லது அவர்கள் ஏன் இவ்வளவு நேரம் எடுத்தார்கள் என்று உத்தரவில் அவர்கள் குறிப்பிடவில்லை. நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவு ஏமாற்றம் அளிக்கிறது. விரிவான உத்தரவு 10-15 நாட்களில் வெளியாகும், அதன் பின்பு தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். அதன்படி முழு தீர்ப்பு வந்த பின்பு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்" என்று விதுஷ்பத் சிங்கானியா தெரிவித்தார்.


Next Story