புரோ லீக் பெண்கள் ஆக்கி போட்டி; ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி

புரோ லீக் பெண்கள் ஆக்கி போட்டியில் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா ஸ்டேடியத்தில் 2024-25 ஆண்டுக்கான புரோ லீக் பெண்கள் ஆக்கி போட்டி இன்று நடந்தது. இதில், ஜெர்மனி மற்றும் இந்திய அணிகள் விளையாடின. போட்டியின் தொடக்கத்தில் தடுத்து ஆடும் நோக்கில் போட்டியை நடத்தும் இந்திய அணி வியூகங்களை வகுத்து செயல்பட்டது.
ஜெர்மனியோ கோல் அடிக்கும் ஆர்வத்தில், ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காத நிலையில், இந்தியாவுக்கு 12-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட, அணி வீராங்கனை தீபிகா ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து, வைஷ்ணவி பால்கே அடுத்த கோல் அடிக்க முற்பட்டு அந்த முயற்சி முடியாமல் போனது. 2-வது கால் பகுதியில் இந்தியா கோல் அடிப்பதற்கான ஆர்வத்தில் விளையாடியது.
இந்த சூழலில், 25-வது நிமிடத்தில், தீபிகா அடித்த பந்து ஷர்மிளா தேவிக்கு சென்றது. அவர் அடித்த பந்து எதிரணியின் கோல் கீப்பர் பிஞ்சா ஸ்டார்க்கின் பேடில் பட்டு வெளியே சென்றது.
26-வது நிமிடத்தில், ஜெர்மனியின் யாரா மண்டேலுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், லேனா மிச்சீல் அடித்த பந்து இந்திய கோல் கீப்பர் சவீதா பூனியாவால் தடுக்கப்பட்டது. இதனால், முதல் பாதியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
அடுத்த அரை மணிநேரமும் இந்தியாவுக்கு சாதகம் ஏற்படும் வகையிலேயே இருந்தது. முடிவில் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. வருகிற 25-ந்தேதி நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது.