யூரோ கால்பந்து தொடர்: ரொனால்டோவின் சாதனையை முறியடித்த 19 வயது வீரர்


யூரோ கால்பந்து தொடர்: ரொனால்டோவின் சாதனையை முறியடித்த 19 வயது வீரர்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 19 Jun 2024 6:06 AM GMT (Updated: 19 Jun 2024 6:07 AM GMT)

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.

டார்ட்மென்ட்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பாரா திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், குரூப் எப் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் துருக்கி மற்றும் ஜார்ஜியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய துருக்கி அணி கோல் அடிப்பதில் தீவிரம் காட்டியது. இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 25-வது நிமிடத்தில் துருக்கியின் மெர்ட் முல்துர் வேகமாக அடித்த ஷாட் கோலாக மாறியது. இதனால் துருக்கி அணி 1-0 என முன்னிலை பெற்றது.

மறுபுறம் ஜார்ஜியா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் ஆடினர். இதன் காரணமாக ஜார்ஜியா அணி போட்டியின் 32-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இதையடுத்து முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து போட்டியின் இரண்டாம் பாதி எந்த அணி இன்னொரு கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் துவங்கியது.

இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். அந்த வகையில், போட்டியின் 65-வது நிமிடத்தில் துருக்கி அணிக்காக களமிறங்கிய 19 வயது இளம் வீரர் அர்டா குலெர் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் கோல் அடித்தார். இதன் மூலம் துருக்கி அணி 2-1 என்ற வகையில் போட்டியில் முன்னிலை பெற்றது. மேலும், போட்டி முடியும் தருவாயில் துருக்கி அணி மேலும் ஒரு கோல் அடித்தது.

இதன் மூலம் இந்த போட்டியில் துருக்கி அணி 3-1 என்ற வகையில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் துருக்கி வீரர் அர்டா குலெர் கோல் அடித்ததன் மூலம் யூரோ கோப்பையில் சாதனை ஒன்றை படைத்துள்ளார். யூரோ கால்பந்து வரலாற்றின் அறிமுக போட்டியில் முதல் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை அர்டா குலெர் பெற்றிருக்கிறார்.

முன்னதாக 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 19 வயது 128 நாளில் முதல் கோல் அடித்தது சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில் கோல் அடித்த அர்டா குலெர் தனது 19 வயது 114-வது நாளில் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.


Next Story