டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே


டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே
x

image courtesy: ICC

அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நைரோபி,

அடுத்த ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தற்போது அதற்காக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஆப்பிரிக்க கண்டதற்கான தகுதி சுற்றுப்போட்டிகள் நைரோபியில் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று குரூப் பி-ல் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் கம்பியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணிக்கு 5.4 ஓவரிலேயே 98 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்த மருமணி 9 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 62 (19 பந்துகள்) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய பிரயன் பெனட் 50 (26 பந்துகள்) ரன்கள் குவித்து அவுட்டானார்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ராசா சரமாரியாக அடித்து நொறுக்கினார். வெறும் 43 பந்துகளில் 133 ரன்கள் குவித்து அதிரடியான பினிஷிங் கொடுத்தார். அவருடன் ரியான் புர்ல் 25 (11 பந்துகள்) ரன்களும், இறுதி ஓவர்களில் வெளுத்து வாங்கிய கிளைவ் மடன்டே 53 (17 பந்துகள்) ரன்களும் குவித்தனர். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஜிம்பாப்வே 344 ரன்கள் குவித்தது.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் பதிவு செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை ஜிம்பாப்வே படைத்துள்ளது. இதற்கு முன் மங்கோலியா அணிக்கு எதிராக நேபாளம் 314 ரன்கள் குவித்ததே சாதனையாகும்.

பின்னர் 345 என்ற இமாலய இலக்கை துரத்திய கம்பியா அணியை 14.4 ஓவரில் 54 ரன்களுக்கு ஜிம்பாப்வே சுருட்டியது. இதன் மூலம் ஜிம்பாப்வே 290 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கம்பியா அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ஜார்ஜு 12 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக பிரண்டன் மவுடா மற்றும் ரிச்சர்ட் யங்கரவா தலா 3 விக்கெட்டுகளும் வேஸ்லே மாதவேர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


Next Story