ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டி டிரா
இன்று கடைசி நாளில் ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது
புலவாயோ,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோவில் நடந்தது.இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 586 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 154 ரன்களும், பிரையன் பென்னெட் 110 ரன்களும், எர்வின் 104 ரன்களும் குவித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 3வது நாள் முடிவில் 125 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 425 ரன்கள் குவித்தது. ரஹ்மத் ஷா 231 ரன்களுடனும் , ஷகிடி 141 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் இரட்டை சதம் அடித்து அசத்திய ரஹ்மத் ஷா 234 ரன்னில் அவுட் ஆனார். இதையத்து அப்சர் ஜசாய் களம் இறங்கினார். அப்சர் ஜசாய் மற்றும் ஷகிடி இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது.ஜிம்பாப்வே அணி 156 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 515 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் தடைப்பட்டது. மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக 4ம் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.
5ம் நாள் ஆட்டமான இன்று கடைசி நாளில் ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு அணி கேப்டன்களும் போட்டியை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர். இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.