மீண்டும் அதை பார்க்க விரும்புகிறேன்... சூப்பர் 8 சுற்றில் இந்தியாவை விட ஆஸி.க்கு சாதகம் உள்ளது - பிராட் ஹாக்
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டு ஆஸ்திரேலியா வெல்வதை பார்க்க விரும்புவதாக பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
சிட்னி,
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் நடைபெற்ற லீக் சுற்றில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா வெறும் 119 ரன்களை கட்டுப்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று வெற்றியை ருசித்தது. அதே வேகத்தில் அமெரிக்காவையும் வீழ்த்திய இந்தியா கடைசி போட்டியில் கனடாவை சந்திக்கிறது.
அதை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு செல்லும் இந்தியா அங்கு நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் விளையாட உள்ளது. அந்த சுற்றில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகளை இந்தியா எதிர்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை இந்தியா வீழ்த்தும் என்று நம்பப்படுகிறது. எனவே ஆஸ்திரேலியா மட்டுமே இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் மீண்டும் இந்தியாவை எதிர்கொண்டு ஆஸ்திரேலியா வெல்வதை பார்க்க விரும்புவதாக பிராட் ஹோக் தெரிவித்துள்ளார். அத்துடன் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா கண்டிப்பாக இந்தியாவை தோற்கடிக்கும் என்று தெரிவிக்கும் அவர் அதற்கான 2 காரணங்கள் பற்றி பேசியது பின்வருமாறு:-
"சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே பிரிவில் விளையாட உள்ளன. அதில் அந்த 2 அணிகளுமே ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காதேசத்தை வீழ்த்தி செமி பைனல் செல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அது நடைபெற்றால் மீண்டும் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பைனலில் மோதும். அதை நான் பார்க்க விரும்புகிறேன்.
அதற்கு முன்பாக சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகம் உள்ளது. ஏனெனில் அவர்கள் இத்தொடரில் ஏற்கனவே ஸ்லோவான பிட்ச்களை கொண்ட கடினமான வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் லீக் போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால் இந்திய அணி வேகத்துக்கு சாதகமான நியூயார்க் பிட்ச்சில் விளையாடி வருகின்றனர். அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் இன்னும் நல்ல பார்மை பெறவில்லை.
மேலும் அவர்கள் பிளாட்டான பிட்ச்களை கொண்ட ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு வருகிறார்கள். எனவே அந்த சூழ்நிலைகளில் விளையாடியவர்கள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு தங்களை அட்ஜஸ்ட் செய்வது மிகவும் கடினம். அதனால் சூப்பர் 8 இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும். ஆனால் அவர்கள் பைனலுக்கு வரும்போது போட்டி வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் அவர்களும் சூழ்நிலைகளை பயன்படுத்தியிருப்பார்கள்" என்று கூறினார்.