மகளிர் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: நியூசிலாந்து 232 ரன்கள் சேர்ப்பு

Image Courtesy: @BCCIWomen
8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
பெங்களூரு,
8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் இந்தியாவின் நவி மும்பை, குவாஹாட்டி, இந்தூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 4 நகரங்களிலும், இலங்கையின் கொழும்புவிலும் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் கொழும்புவில் நடைபெறுகின்றன.
உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் ஒரு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. மழை காரணமாக ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 42 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 232 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோபி டிவைன் 54 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் ஸ்ரீ சரணி 3 விக்கெட்டும், கிராந்தி கவுட், அருந்ததி ரெட்டி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 233 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி ஆட உள்ளது.






