மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணி வென்றால் ஜெமிமா உடன் சேர்ந்து... - கவாஸ்கர் அறிவிப்பு


மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணி வென்றால் ஜெமிமா உடன் சேர்ந்து... - கவாஸ்கர் அறிவிப்பு
x

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடந்த பரபரப்பான அரையிறுதியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127 ரன், 14 பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89 ரன்) ஆகியோரது அசாத்தியமான பேட்டிங்கால் இந்திய அணி 48.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இதன் மூலம் பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை விரட்டிப்பிடித்த அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்தது.

கடைசி வரை களத்தில் நின்று வெற்றிக்கு அழைத்து சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளப்பூரிப்பில் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட நேரம் தேம்பி தேம்பி அழுதார். 25 வயதான ஜெமிமா மும்பையைச் சேர்ந்தவர். போட்டியை பார்க்க அவரது பெற்றோரும் வந்திருந்தனர். அவர்களை கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு இதே மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றால் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் சேர்ந்து தாம் பாட்டு பாட உள்ளதாக இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நானும் அவளும் (ஜெமிமா ரோட்ரிக்ஸ்) சேர்ந்து ஒரு பாடலைப் பாடுவோம். அவர் கிதார் வாசிக்கட்டும் நான் பாடுவேன். சில வருடங்களுக்கு முன்பு பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் நாங்கள் உண்மையில் இதை செய்துள்ளோம்.

அங்கே ஒரு இசைக்குழு வாசித்துக் கொண்டிருந்தபோது அதை நாங்கள் செய்ய முடிவெடுத்தோம். அவள் கிதாரை இசைக்க நான் பாடினேன். அதனால் இந்தியா வென்றால், நான் அதை மீண்டும் செய்ய விரும்புகிறேன். எனவே இந்தியா வென்ற பின் அவர் இந்த வயதான மனிதருடன் மீண்டும் செய்ய மகிழ்ச்சியாக இருந்தால் நானும் செய்யத் தயாராக இருக்கிறேன். நான் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

1 More update

Next Story