மகளிர் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அயர்லாந்து
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் அயர்லாந்து கைப்பற்றியது.
சில்ஹெட்,
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வங்காளதேசம் வென்றது. தொடர்ந்து நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் வங்காளதேசமும், 2வது ஆட்டத்தில் அயர்லாந்தும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 123 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக சோபனா மோஸ்தரி 45 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 124 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அயர்லாந்து 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 124 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக லாரா டெலானி 36 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் ரபேயா கான் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் அயர்லாந்து கைப்பற்றியது.