மகளிர் டி20 கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

image courtesy:twitter/@ICC
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 75 ரன்கள் அடித்தார்.
ஆக்லாந்து,
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அமெலியா கெர் 51 ரன்கள் அடித்தார்.
பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீராங்கனைகள் ஆன பெத் மூனி - ஜார்ஜியா வோல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து வெற்றியை உறுதி செய்தனர். வெறும் 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 138 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. பெத் மூனி 75 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஜார்ஜியா வோல் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் லியா தஹுஹு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பெத் மூனி ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து 2-வது போட்டி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.