மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா

Image Courtesy: @ProteasWomenCSA
இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.
பார்படாஸ்,
தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 45.5 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 278 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் இன்னின்ஸ் அத்துடன் முடிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டிரிஸ்டன் பிரிட்ஸ் 101 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபி ப்ளெட்சர் 3 விக்கெட் வீழ்த்தினார். மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு 39 ஓவர்களில் 288 ரன்கள் என்ற இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 27.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 121 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 166 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மசபாடா க்ளாஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.






