மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா
இந்தியா - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
ராஜ்கோட்,
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 370 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாப் ஆர்டர் வீராங்கனைகளான மந்தனா 73 ரன்களும், பிரதிகா ராவல் 67 ரன்களும், ஹர்லீன் தியோல் 89 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 102 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன கேபி லூயிஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதனை தொடர்ந்து கை கோர்த்த சாரா போர்ப்ஸ் - கூல்டர் ரெய்லி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் நிதானமாக விளையாடிய சாரா 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கியவர்களில் லாரா டெலானி (37 ரன்கள்), லீயா பால் (27 ரன்கள்) தவிர மற்றவர்கள் யாரும் நிலைக்கவில்லை.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கூல்டர் ரெய்லி பொறுப்புடன் விளையாடி அணியை 200 ரன்களை கடக்க உதவினார். முடிவில் 50 ஓவர்கள் தாக்குப்பிடித்த அயர்லாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா தொடரையும் 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பறியுள்ளது.
அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக கூல்டர் ரெய்லி 80 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சதமடித்து அசத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.