தென் ஆப்பிரிக்க டி20 லீக்கில் விளையாட சம்மதித்தது ஏன்..? தினேஷ் கார்த்திக் பதில்
எஸ்.ஏ. டி20 லீக் தொடரில் தினேஷ் கார்த்திக் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கேப்டவுன்,
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் டி20 லீக் எஸ்.ஏ.டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதன் 3வது சீசன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் மூலம் இந்த தொடரில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சர்வதேசம் மற்றும் ஐபிஎல் என பி.சி.சி.ஐ. சம்பந்தபட்ட அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றதால் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் பங்கேற்க அனுமதி கிடைத்தது.
கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியில் இடம்பிடித்திருந்த அவர், அந்த சீசனோடு ஓய்வையும் அறிவித்துவிட்டார். அதனை தொடர்ந்து பெங்களூரு அணி அவரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க டி20 லீக்கில் விளையாட சம்மதித்தது ஏன்? என்பது குறித்து போட்டியின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு தினேஷ் கார்த்திக் அளித்துள்ளார். அதில்,
"உண்மையிலேயே நான் இந்த தொடரில் விளையாட ஒப்புக்கொண்டதற்கு 2 முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஐ.பி.எல். தொடருக்கு அடுத்து மிகவும் பிரபலமான தொடராக இது மாறி வருகிறது என்று நான் நம்புகிறேன். அதனால் இந்த தொடரில் விளையாட ஒப்புக்கொண்டேன்.
இரண்டாவதாக ராயல்ஸ் நிர்வாகத்தில் விளையாட வேண்டும் என்கிற ஆசை என்னிடம் இருந்தது. ஐ.பி.எல். தொடரில் ராயல்ஸ் அணிக்காக விளையாட முடியவில்லை. எனவே இந்த தொடரில் அந்த அணியுடன் இணைய வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டேன்" என்று கூறினார்.