வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அஸ்வினை தேர்ந்தெடுத்தது ஏன்..? - துணை பயிற்சியாளர் விளக்கம்


வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அஸ்வினை தேர்ந்தெடுத்தது ஏன்..? - துணை பயிற்சியாளர் விளக்கம்
x

image courtesy: PTI

தினத்தந்தி 7 Dec 2024 8:35 AM IST (Updated: 7 Dec 2024 11:02 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றமாக தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுப்மன் கில், அஸ்வின் இடம் பிடித்தனர்.

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களுடன் நல்ல நிலையில் உள்ளது. லபுஸ்சேன் 20 ரன்களுடனும் , மெக்ஸ்வினி 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக முதல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருப்பினும் இந்தியா வென்றது. அந்த காரணத்தால் இந்தப் போட்டியிலும் சுந்தர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அடிலெய்ட் பிட்ச்சில் சுந்தரை விட அஸ்வின் பொருத்தமாக இருப்பார் என்பதாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டோஸ்கேட் தெரிவித்துள்ளார். மேலும் 7வது இடத்தில் நிதிஷ் ரெட்டி பேட்டிங் செய்வதற்கு இருப்பதால் அஸ்வினை பயமின்றி தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து தொடரில் அசத்தினார். கடந்தப் போட்டியில் நாங்கள் பேட்டிங்கை கொஞ்சம் வலுவாக்க விரும்பியதால் சுந்தரை தேர்ந்தெடுத்தோம். ஆனால் கடந்த போட்டியில் நிதிஷ் ரெட்டி பேட்டிங் எப்படி செய்கிறார் என்பதை நாங்கள் பார்த்தோம்.

அதனால் இந்த போட்டியில் உள்ள சூழ்நிலைகளில் தற்சமயத்தில் யார் சுழல் பந்து வீச்சில் அசத்தக்கூடியவர் என்பதையும் பார்த்தோம். அது போன்ற சூழ்நிலையில் அஸ்வின் இங்குள்ள சூழ்நிலையில் அதிக விக்கெட்களை எடுப்பார் என்று நாங்கள் கருதுகிறோம்.

நிதிஷ் ரெட்டி உங்களுக்கு ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்யும் போது 8வது இடத்தில் அஸ்வின் அசத்துகிறாரா என்ற கவலை இல்லாமல் தன்னம்பிக்கையுடன் இருக்க முடியும். இந்த பிட்ச்சில் அஸ்வின் கொஞ்சம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கருதுகிறோம். மற்றபடி அவர்களுக்கிடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை" என்று கூறினார்.


Next Story