கேப்டன்ஷிப் பதவியை நிராகரித்தது ஏன்..? பும்ரா விளக்கம்

image courtesy:ANI
டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவிக்கு பி.சி.சி.ஐ. தன்னை பரிசீலித்ததாக பும்ரா கூறியுள்ளார்.
மும்பை,
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா கடந்த மாதம் 7-ம் தேதி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் ரோகித் சர்மாவுக்கு அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் நியமிக்கப்பட்டது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அடிக்கடி காயத்தை சந்திப்பதால் அவருக்கு கேப்டன் பதவி வழங்க பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருந்த தன்னை கேப்டன் பதவிக்கு பி.சி.சி.ஐ. அனுகியதாக ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். இருப்பினும் பணிச்சுமை மற்றும் அடிக்கடி காயம் சந்திப்பதை கருத்தில் கொண்டு அந்த வாய்ப்பை தான் நிராகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஐ.பி.எல். தொடரின் போது ரோகித் மற்றும் விராட் ஓய்வு பெறுவதற்கு முன்பு 5 டெஸ்ட் போட்டிகள் (இங்கிலாந்து டெஸ்ட் தொடர்) கொண்ட தொடரில் எனது பணிச்சுமை குறித்து பி.சி.சி.ஐ.-யிடம் பேசினேன். இந்த தொடரில் எனது பணிச்சுமை குறித்து நான் மருத்துவக்குழுவினருடன் கலந்துரையாடியதாகக் கூறினேன்.
எனவே நாங்கள் சற்று புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்ற முடிவு செய்தோம். எனவே நான் பி.சி.சி.ஐ.-யிடம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் என்னால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது என்று கூறினேன். எனவே கேப்டன்ஷிப் பதவிக்கு என்னை பரிசீலிக்க வேண்டாம் என்று கூறினேன்.
ஆம் பி.சி.சி.ஐ. என்னை கேப்டன்ஷிப் பதவிக்கு பரிசீலித்தது. ஆனால் அது நியாயமில்லை என்று கூறி நிராகரித்து விட்டேன். ஏனெனில், ஒருவர் 3 போட்டிகளுக்கு தலைமை தாங்கிவிட்டு, மற்ற போட்டிகளுக்கு வேறு ஒருவர் தலைமை ஏற்பது அணிக்கு நியாயமாக இருக்காது. இது அணிக்கு நியாயமில்லை. மேலும் நான் எப்போதும் அணியை முதன்மைப்படுத்த விரும்பினேன்" என்று கூறினார்.






