முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்புவது எப்போது ? ரோகித் சர்மா விளக்கம்


முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்புவது எப்போது ?  ரோகித் சர்மா விளக்கம்
x

காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் முகமது ஷமி இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 180 ரன்களும், ஆஸ்திரேலியா 337 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 157 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது.இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (140 ரன்கள்) மற்றும் பந்துவீச்சில் (8 விக்கெட்டுகள்) ஸ்டார்க் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் அவரால் இடம் பெற முடியவில்லை.முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு குறையாகவே இருந்து வருகிறது .

இந்த நிலையில், இந்திய அணிக்கு முகமது ஷமி எப்போது திரும்புவார் என்ற கேள்விக்கு ரோகித் சர்மா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

முகமது ஷமி இங்கு வந்து விளையாடுவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. . நாங்கள் ஷமியை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். நாங்கள் அவருக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. என தெரிவித்தார்.


Next Story