தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?
x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

டர்பன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நேற்றிரவு நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 107 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 203 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் 17.5 ஓவர்களில் 141 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க வீரர்கள் கிளாசன் 25 ரன்களும், கோட்சே 23 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி வீரர்கள் வருண் சக்கரவரத்தி, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : நாங்கள் கடைசி 3-4 தொடர்களாகவே அதிரடியான ஆட்டத்தை டி20 கிரிக்கெட்டில் வெளிப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. சஞ்சு சாம்சன் பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வருகிறார். அந்த உழைப்பின் பயனைத்தான் தற்போது அனுபவித்து வருகிறார். 90 ரன்களில் அவர் ஆடிக்கொண்டிருந்த போதும் அணிக்கு பவுண்டரி தேவை என்ற சூழ்நிலை இருந்தபோது அந்த நேரத்திலும் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி அவரது திறனை காண்பித்தார்.

அதேபோன்று இந்த போட்டியில் நாங்கள் மில்லர் மற்றும் கிளாசென் ஆகியோரின் விக்கெட்டுகளை சரியான நேரத்தில் எடுக்க நினைத்தோம். அதை எங்களது அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் செய்து காண்பித்தனர். உண்மையிலேயே ஒரு அணியாக நாங்கள் மிகச்சிறப்பாக விளையாடி உள்ளதாக நினைக்கிறேன். அனைவருமே தங்களது பொறுப்பினை கையில் எடுப்பதால் என்னுடைய வேலை கேப்டனாக சற்று குறைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story