இந்த தொடரில் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம் - வாஷிங்டன் சுந்தர்


இந்த தொடரில் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம் - வாஷிங்டன் சுந்தர்
x

image courtesy: twitter/@BCCI

தினத்தந்தி 14 July 2024 9:52 PM IST (Updated: 14 July 2024 9:57 PM IST)
t-max-icont-min-icon

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகன் விருது வென்றார்.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்திருந்த இந்தியா, அடுத்த 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரில் இன்று 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 ரன்கள் அடிக்க ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

18.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக டியான் மியர்ஸ் 34 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளும் , துபே 2 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அபிஷேக் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்நிலையில் முதல் போட்டியில் தோற்றதும் தென் ஆப்பிரிக்காவை போன்ற சூழ்நிலை ஜிம்பாப்பேவில் இருக்கும் தகவல்களை தெரிந்து கொண்டதாக சுந்தர் கூறியுள்ளார். எனவே அதற்கு தகுந்தாற்போல் விளையாடி தொடரை வென்றதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இத்தொடரை வெற்றியுடன் முடித்துள்ளது நல்லது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த பின் தென் ஆப்பிரிக்காவை போலவே இங்கேயும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கிறது என்பதை உணர்ந்தோம். அந்த தகவலை தெரிந்துக் கொள்ள எங்களுக்கு போதுமான நேரம் இருந்தது. இந்த தொடரில் நான் நன்றாக பந்து வீசினேன். இத்தொடரில் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். ஒரு அணியாக நாங்கள் நிறைய வெற்றியை பெற்றோம்" என்று கூறினார்.


Next Story