எங்களிடமும் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் - இந்திய அணிக்கு நியூசிலாந்து கேப்டன் சவால்


எங்களிடமும் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் - இந்திய அணிக்கு நியூசிலாந்து கேப்டன் சவால்
x

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் நாளை நடைபெற உள்ளது.

புனே,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

புனே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று கூறப்படும் நிலையில், அங்கே இந்தியா 4 ஸ்பின்னர்களுடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புனேவில் சுழலுக்கு சாதகமாக பிட்ச் இருந்தாலும் கவலை இல்லை என்று நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார். ஒருவேளைக்கு அது போன்ற சூழல் உருவானால் அதை தங்களிடம் உள்ள 4 ஸ்பின்னர்களை அஸ்திரங்களாக வைத்து சமாளித்து வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விரைவாக உட்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம். இங்கே பிட்ச் கொஞ்சம் அதிகமாக சுழன்றால் எங்களிடமும் நான்கு ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். அதே சமயம் நாங்கள் இப்படி போட்டியை பற்றி அதிகமான ஐடியாக்களை பின்பற்ற முயற்சிக்கவில்லை. பெங்களூருவை விட இங்குள்ள ஆடுகளம் வித்தியாசமாக இருக்கும்.

அதற்கு நாங்கள் விரைவாக உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதைப் பற்றி நாங்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இந்த மைதானத்தில் நடந்த முந்தைய போட்டிகளின் தகவல்களை நாங்கள் கொஞ்சம் பெறுவதற்கு முயற்சிக்கிறோம். அதே போல இங்குள்ள பயிற்சி ஆடுகளத்தில் அதைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

எனவே இப்போட்டியிலும் நாங்கள் அசத்துவோம் என்று நம்புகிறேன். முதல் போட்டியில் வென்றது பயிற்சியாளர் ஜான் ரைட் மற்றும் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. அது முழுமையாக அணியின் முயற்சியால் கிடைத்தது. நாங்கள் அந்த ஸ்பெஷல் வெற்றியை கொண்டாடினோம். ஆனால் அதிலிருந்து விரைவாக திரும்பி அதே தன்னம்பிக்கையுடன் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சிக்க உள்ளோம். அந்த வெற்றியால் கிடைத்த தன்னம்பிக்கையை இங்கே எடுத்து வருவது மிகவும் முக்கியம். அதை வைத்து எதிரணிக்கு நாங்கள் போட்டியை கொடுத்து சிறப்பாக விளையாடுவோம்" என்று கூறினார்.


Next Story