ஓய்விலிருந்து மீண்டும் வர தயாரான வார்னர்.. ஆஸ்திரேலிய கேப்டன் அளித்த அதிரடி பதில்
ஆஸ்திரேலிய அணிக்கு தேவைப்பட்டால் ஓய்விலிருந்து மீண்டும் வர தயாராக இருப்பதாக வார்னர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ஆன டேவிட் வார்னர், சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8786 ரன்களும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6932 ரன்களும், 110 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3277 ரன்களும் குவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடுவதாக அறிவித்திருந்தார்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு தேவைப்பட்டால் இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஓய்விலிருந்து மீண்டும் வந்து தொடக்க வீரராக விளையாட தயாராக இருப்பதாக டேவிட் வார்னர் அறிவித்தார்.
இந்நிலையில் அந்த அவசியம் உருவாகவில்லை என்று அவருக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிரடியான பதிலை அளித்துள்ளார். மேலும் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவதை வர்ணனையாளராக மட்டும் பாருங்கள் என்றும் அவருக்கு கம்மின்ஸ் கிண்டலான பதிலை கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "வார்னரும் நாங்களும் ஆர்வமாக உள்ளோம். நாங்கள் அதை மிகவும் தீவிரமாக பேசி தொடர்பில் உள்ளோம். அவரிடம் சில நாட்கள் முன்பாக நான் பேசினேன். அப்போது இந்த கோரிக்கையை அவர் என்னிடம் வைத்தாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவர் என்னிடம் கேட்டார். அப்போது சிட்னி தண்டர் அணிக்காக பிக்பேஷ் தொடரில் அசத்துவதற்கு வாழ்த்துகள் என்று அவரிடம் சொன்னேன்.
மேலும் உங்களுடைய வர்ணனையை கேட்க ஆர்வத்துடன் உள்ளதாகவும் வார்னரிடம் கூறினேன். மீண்டும் அணிக்குள் அவர் வருவதற்கு கவலைப்பட மாட்டார் என்று நினைக்கிறேன். வார்னரை நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அவர் ஓய்வு பெற்று விட்டார். சாரி நண்பா" என்று கூறினார்.