விராட் கோலி ஒருமுறை மட்டும் பாகிஸ்தான் வந்தால்போதும் இந்தியாவை மறந்துவிடுவார் - ஷாகித் அப்ரிடி


விராட் கோலி ஒருமுறை மட்டும் பாகிஸ்தான் வந்தால்போதும் இந்தியாவை மறந்துவிடுவார் - ஷாகித் அப்ரிடி
x
தினத்தந்தி 12 July 2024 3:13 AM GMT (Updated: 12 July 2024 3:38 AM GMT)

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு வர வேண்டும் என்று ஷாகித் அப்ரிடி கோரிக்கை வைத்துள்ளார்.

லாகூர்,

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. ஆனால் எல்லைப் பிரச்சனை காரணமாக அந்நாட்டிற்கு சென்று விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தங்களுடைய போட்டிகளை இலங்கை அல்லது துபாய் மண்ணில் நடத்துமாறு ஐசிசி-க்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு இந்தியா வர வேண்டும் என முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன் விராட் கோலிக்கு பாகிஸ்தானில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் அவர்களுக்காகவே வர வேண்டும் என்று அப்ரிடி கேட்டுக் கொண்டுள்ளார். அதை விட பாகிஸ்தானுக்கு வந்து விளையாடினால் அங்குள்ள விருந்தோம்பலை பார்த்து விராட் கோலி இந்தியாவையே மறந்து விடுவார் என்றும் அப்ரிடி கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு;-

"இந்திய அணியை பாகிஸ்தான் நாட்டிற்கு வரவேற்கிறேன். 2005ஆம் ஆண்டு இந்தியாவிற்கு நாங்கள் பயணித்த போது, அவ்வளவு மரியாதையை பெற்றிருக்கிறோம். என்னை பொறுத்தவரை அரசியலை விளையாட்டுடன் இணைக்க தேவையில்லை.

ஒருவேளை விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால் அவர் எங்கள் விருந்தோம்பலையும் வரவேற்பையும் பார்த்து இந்தியாவில் இருக்கும் விருந்தோம்பலை மறந்து விடுவார். மேலும் பாகிஸ்தானில் விராட் கோலிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எனவே நாங்கள் விராட் கோலி பாகிஸ்தானில் விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம்" என்று கூறினார்.


Next Story