விஜய் ஹசாரே டிராபி; விதர்பாவுக்கு எதிரான ஆட்டம்... தமிழகம் 256 ரன்களில் ஆல் அவுட்
தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக துஷார் ரஹேஷா 75 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்,
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஒரு லீக் ஆட்டத்தில் தமிழகம் - விதர்பா அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற விதர்பா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தமிழகம் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக துஷார் ரஹேஜா மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜெகதீசன் 6 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரதீஷ் ரஞ்சன் பால் 28 ரன், பாபா இந்திரஜித் 7 ரன், விஜய் சங்கர் 27 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
மறுபுறம் நிதானமாக ஆடி வந்த துஷார் ரஹேஜா அரைசதம் அடித்த நிலையில் 75 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் 40 ரன், முகமது அலி 48 ரன், சாய் கிஷோர் 14 ரன், வருண் சக்கரவர்த்தி 3 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் தமிழகம் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 256 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் அதிகபட்சமாக துஷார் ரஹேஷா 75 ரன்கள் எடுத்தார். விதர்பா தரப்பில் தர்ஷன் நல்கண்டே 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா ஆட உள்ளது.