இன்னும் சில ஆண்டுகளில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் ஆடுவார் - சஞ்சு சாம்சன்

ஐ.பி.எல். வரலாற்றில் மிக குறைந்த வயதில் ஏலம் போன வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்.
ஜெய்ப்பூர்,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். -ம் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.
இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இதில் இடம்பெற்றிருந்த மிக குறைந்த வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) வாங்க ராஜஸ்தானும், டெல்லியும் போட்டியிட்டன. இதனால் இவரது விலை அடிப்படை தொகையான ரூ. 30 லட்சத்திலிருந்து உயர்ந்து கொண்டே சென்றது.
முடிவில் ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் ஏலம் போன வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார்.
அந்த சூழலில் சமீபத்தில் முடிவடைந்த ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடிய சூர்யவன்ஷி அதிரடியான ஆட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தார். அதிலும் குறிப்பாக இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தலா ஐந்து பவுண்டரி மற்றும் சிக்சர் என குறைந்த பந்துகளிலேயே 67 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதில் அவர் அடித்த சிக்சர்கள் எல்லாம் தொலைதூரம் பறந்தன.
இதனால் அவரை ராஜஸ்தான் ஏலத்தில் எடுத்தது சரிதான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தற்போது ராஜஸ்தான் அணியில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வரும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து கேப்டன் சஞ்சு சாம்சன் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "வைபவ் சூர்யவன்ஷி மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். அவரால் பவர் ஹிட்டிங் செய்ய முடியுமா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் உள்ளது. ஆனால் நாங்கள் பார்த்தவரை எங்களுடைய அகாடமி மைதானத்தில் ஸ்டேடியத்தை விட்டு வெளியேயும் சிக்சர்களை பார்க்க விடுகிறார். அந்த அளவிற்கு அவரிடம் பவர் ஹிட்டிங் திறமை இருக்கிறது.
அவருடைய எதிர்காலத்தை புரிந்து கொண்டு நான் அவருக்கு ஒரு மூத்த சகோதரர் போல என்னுடைய ஆதரவை தொடர்ந்து வழங்க காத்திருக்கிறேன். மேலும் வீரர்களின் ஓய்வறையில் அவரை இயல்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் எங்களது ஒரு எண்ணமாக உள்ளது. இதுபோன்ற கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு நாம் எப்போதும் முழு ஆதரவாக இருக்க வேண்டும். அந்த வகையில் நாங்கள் அவரை தொடர்ச்சியாக ஆதரிக்க உள்ளோம்.
நிச்சயம் அவருக்கு இருக்கும் திறமைக்கு வெகுவிரைவில் இன்னும் சில ஆண்டுகளில் அவர் இந்திய அணியில் விளையாடுவார். தற்போது நான் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் அளவிற்கு தயாராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு அவர் பயிற்சியின்போது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் அடிக்கும் ஒரு சில ஷாட்கள் மிகவும் அபாரமாக உள்ளன" என்று கூறினார்.