டி.என்.பி.எல்.: திண்டுக்கல் அணி வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்துகிறது.. மதுரை பாந்தர்ஸ் குற்றச்சாட்டு

image courtesy:twitter/@TNPremierLeague
டி.என்.பி.எல். தொடரில் கடந்த 14-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.
சென்னை,
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் கடந்த 14-ந்தேதி சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.
இந்தப் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனம் தடவப்பட்ட துண்டுகளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் புகார் அளித்து உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த கோரி மதுரை அணியின் தலைமை செயல் அதிகாரி டி.பூஜா தமிழ்நாடு பிரீமியர் லீக் தலைமை செயல் அதிகாரி பிரசன்னாவுக்கு நேற்று இ.மெயில் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக அஸ்வின் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீது அவசர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்னாவுக்கு மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.ஒ.ஒ. எஸ்.மகேஷ் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எங்களுக்கு எதிராக சமீபத்தில் நடந்த போட்டியில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை சேதப் படுத்தியது தொடர்பாக ஒரு தீவிரமான விஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக இதை நான் எழுதுகிறேன்.
போட்டிக்கு முன்பு நடுவர்கள் பலமுறை எச்சரிக்கை செய்த போதும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ரசாயனங்கள் தடவப்பட்டதாக தோன்றும் துண்டுகளை பயன்படுத்தி பந்தை வெளிப்படையாக சேதப்படுத்தியது.
இதனால் பந்தின் தன்மை அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடினமான கல் போல் இருந்தது. பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்கும்போது உலோக ஒலியை உருவாக்கியது. இது ஆட்டத்தின் முடிவை பாதித்தது மட்டுமல்லாமல் எங்கள் இளம் அணியை மனசோர்வடைய செய்தது. நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
1. ரசாயனம் தடவிய துண்டுகளையும், பந்தை சேதப்படுத்தும் பிற முறைகளையும் ஆராய வேண்டும். பந்தை சேதப்படுத்த பயன்படுத்தப்பட்ட துண்டுகள் எங்கிருந்து வந்தது, அதை வழங்கியவர்கள் யார் என்பதை டி.என்.பி.எல். நிர்வாகம் கண்டறிய வேண்டும்.
2. அந்த துண்டுகளில் வேதியியல் மாற்றங்கள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய ஆய்வக சோதனை நடத்த வேண்டும்.
3. அஸ்வின், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மற்றும் இந்த மோசமான விவகாரத்தில் தொடர்புடைய மற்ற அனைவருக்கும் கடுமையான தண்டனையை அளிக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் மற்றும் பீல்டர்கள் பந்தை சேதப்படுத்த பயன்படுத்திய பிற சாத்தியமான முறைகள் குறித்தும் எங்கள் தொழில் நுட்ப குழு ஆய்வு செய்து வருகிறது. அதன் விவரங்களை விரிவான அறிக்கையாக நாங்கள் வழங்குவோம். வேண்டுமென்றே சேதப்படுத்துதல் மற்றும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை ஆதாரங்கள் தெரி விக்கின்றன.
எனவே விளையாட்டின் நேர்மையை நிலை நிறுத்த தாங்கள் விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
எங்கள் தலைமை பயிற்சியாளர் சுர்ஜித் சந்திரன், உதவி பயிற்சியாளர் எஸ்.கார்த்திக் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளை எங்கள் அணியின் தலைமை செயல் அதிகாரி டி.பூஜா ஏற்கனவே உங்களுக்கு அனுப்பியுள்ளார். போட்டியின்போது பந்தின் தன்மை வியக்கத்தக்க முறையில் மாறியது என்பது தெளிவாகிறது.
பவர்பிளேயின்போது பந்து சரியான நிலையில் இருந்தது. மேலும் எங்கள் அணியின் ஸ்கோர் அதை பிரதிபலித்தது. ஆனால் போட்டி தொடர்ந்து செல்லும்போது பந்து ஒரு உலோக ஒலியை உருவாக்க தொடங்கியது. கடினமான உலோக கல் போல் பந்தின் தன்மை இருந்தது.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் துண்டுகளை பயன்படுத்தியதால் பந்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணங்களாக ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாக நாங்கள் நம்புகி றோம்.
லைகா கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் பல முறை எச்சரித்த போதும் மைதான நடுவர்களும், போட்டி நடுவர்களும் நடவடிக்கை எடுக்க தவறியது கவலை அளிக்கிறது.
இந்த விஷயத்தை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டு ஆட்டத்தின் நேர்மையை காப்பதற்கும், மதுரை அணிக்கு தரப்பட வேண்டிய புள்ளிகளை வழங்குவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.






