டிம் பெயின் கூறுவது பொய்... நாங்கள் ஆஸ்திரேலியாவில் பல இன்னல்களை அனுபவித்தோம் - ஷர்துல் தாகூர்


டிம் பெயின் கூறுவது பொய்... நாங்கள் ஆஸ்திரேலியாவில் பல இன்னல்களை அனுபவித்தோம் - ஷர்துல் தாகூர்
x
தினத்தந்தி 11 Aug 2024 4:27 AM GMT (Updated: 11 Aug 2024 5:13 AM GMT)

கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட இன்னல்கள் குறித்து தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாகூர் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட இன்னல்கள் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெயின் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியது முற்றிலும் பொய் என்றும் இந்திய வீரர்கள் அங்கு பட்ட கஷ்டத்தையும் வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.

அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் இந்திய அணியானது ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்த போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருந்தது.

அந்த தொடரின்போது கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்ததால் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ. சில சலுகைகளை ஆஸ்திரேலியா அணியிடம் கேட்டுக் கொண்டது. ஆனாலும் ஆஸ்திரேலியா நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்க மறுத்தது. குறிப்பாக குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இந்திய வீரர்களுக்கு ஒத்துழைப்பு மறுக்கப்பட்டது.

அப்போது 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு நிபந்தனை தெரிவிக்கப்பட்ட வேளையில் அதனை 10 நாட்களாக குறைக்குமாறு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுகொண்டது. ஆனால் அதற்கு குயின்ஸ்லாந்து மாகாண நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் இந்திய வீரர்களுக்கு முறையான உணவும் அங்கு செய்து தரப்படவில்லை. ஆனால் சமீபத்தில் பேட்டியளித்த டிம் பெயின் அதற்கு நேர்மாறாக கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரது பேச்சு குறித்து பேசியிருந்த தாகூர் கூறுகையில் : 2020--ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் எங்கள் அணியின் வீரர்களை அவர்கள் மிகவும் மோசமாக நடத்தினார்கள். முதல் நான்கு, ஐந்து நாட்களுக்கு உதவி செய்ய எந்த ஒரு பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. ஹோட்டல் அறையில் ஒரு படுக்கை உறையை மாற்ற வேண்டும் என்றால் கூட நாங்கள் ஐந்து ஆறு மாடி ஏறி செல்ல வேண்டி இருந்தது. அதோடு நாங்கள் மிகவும் சோர்வடையும் வகையில் எந்த ஒரு உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து அப்போதையே கேப்டன் ரஹானே மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் தொடர்ந்து ஆஸ்திரேலிய நிர்வாகத்துடன் சண்டையிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story