டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் அதிரடி.. இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா


டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் அதிரடி.. இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
x
தினத்தந்தி 2 Nov 2025 3:25 PM IST (Updated: 2 Nov 2025 3:28 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்கள் அடித்தார்.

ஹோபர்ட்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது இன்று ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. டிராவிஸ் ஹெட் 6 ரன்களில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இங்கிலிஸ் ஒரு ரன்னில் நடையை கட்டினார். இருவரின் விக்கெட்டையும் அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். மறுமுனையில் நிதானமாக ஆடிய மார்ஷ் 11 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த மிட்செல் ஓவன் சந்தித்த முதல் பந்திலேயே போல்டானார். இதனையடுத்து டிம் டேவிட் உடன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் கை கோர்த்தார்.

இருப்பினும் விக்கெட் விழுவதை நினைத்தெல்லாம் கவலைப்படாத டேவிட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். வெறும் 38 பந்துகளில் 74 ரன்கள் அடித்த அவர் ஷிவம் துபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்டோய்னிஸ் மற்றும் மேத்யூ ஷார்ட் கைகோர்த்து அதிரடி காட்டினர். இதனால் ஆஸ்திரேலியா அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது.

சிறப்பாக ஆடிய ஸ்டோய்னிஸ் அரைசதம் கடந்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டோய்னிஸ் 64 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். மேத்யூ ஷார்ட் 26 ரன்களுடனும், பார்ட்லெட் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.

1 More update

Next Story