திலக், நமன் திர் அதிரடி.. டெல்லி அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்

image courtesy:twittr/@IPL
மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 59 ரன்கள் அடித்தார்.
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ரிக்கல்டன் களமிறங்கினர். நடப்பு சீசனில் தொடர்ந்து சொதப்பி வரும் ரோகித் சர்மா இந்த ஆட்டத்திலாவது அசத்துவாரா? என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 18 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார்.
அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த ரிக்கல்டன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா கூட்டணி அதிரடியாக விளையாடி மும்பை அணிக்கு வலு சேர்த்தது. இந்த ஜோடி 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. சூர்யகுமார் யாதவ் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் களமிறங்கிய நமன் திரும் அதிரடியாக விளையாட மும்பை வலுவான இலக்கை நோக்கி பயணித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் அடித்துள்ளது. நமன் திர் 38 ரன்களுடனும், வில் ஜாக்ஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் விப்ராஜ் நிகாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி டெல்லி களமிறங்க உள்ளது.