விராட் கோலி தடுமாற இதுதான் காரணம் - அனில் கும்ப்ளே விமர்சனம்


விராட் கோலி தடுமாற இதுதான் காரணம் - அனில் கும்ப்ளே விமர்சனம்
x

image courtesy: AFP

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

புனே,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்துள்ளது. டாம் பிளண்டெல் 30 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுந்தர் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். நியூசிலாந்து இதுவரை 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தின் பகுதி நேர பவுலரான கிளென் பிலிப்சுக்கு எதிராக அவுட்டான விராட் கோலி இப்போட்டியிலும் சான்ட்னருக்கு எதிராக மோசமான ஷாட் அடித்து பெவிலியன் திரும்பினார். அதற்கு இந்த ஆண்டு செப்டம்பர் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத விராட் கோலி துலீப் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடாமல் நேரடியாக களமிறங்கியதே காரணம் என்று முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"ஓரிரு உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருந்தால் அது இங்கு உதவியிருக்கும். ஏனெனில் முதன்மையான போட்டியில் விளையாடுவது பயிற்சி எடுப்பதை விட அதிகமாக உதவும். அது உங்கள் கையை ஓங்க வைக்கும். அதே சமயம் சுழலுக்கு எதிராக விராட் கோலி தடுமாறுவதற்கு அது மட்டுமே காரணம் என்று நான் நினைக்கவில்லை. களத்திற்கு அவர் பேட்டிங் செய்ய வரும்போது பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது.

இன்னிங்சின் தொடக்கத்தில் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக அவர் சவால் கொடுக்கும் முனைப்புடன் விளையாடினார். ஆனால் சூழ்நிலைகள் எதிரணி ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தன. ஒரு தந்திர நகர்வால் கொண்டு வரப்பட்ட கிளென் பிலிப்ஸ் சுழலில் சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரின் வெளியேற்றத்துக்கு முக்கிய பங்காற்றியது" என்று கூறினார்.


Next Story