ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்றால் லக்னோ இதைத்தான் தேர்வு செய்ய வேண்டும் - இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்

image courtesy:twitter/@IPL
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோத உள்ளன.
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் ஐதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 44 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதில் இஷான் கிஷன் சதத்தோடு 286 ரன்கள் குவித்து மலைக்க வைத்த ஐதராபாத் அணி, எதிரணியை 242 ரன்னில் மடக்கியது. அந்த அணியில் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ்குமார் ரெட்டி என அபாயகரமான பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்.
மறுபுறம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் லீக்கில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் நெருங்கி வந்து தோல்வியை தழுவியது. இதனால் அதிரடி வீரர்கள் நிறைந்த ஐதராபாத் அணியை லக்னோ பந்துவீச்சாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் லக்னோ டாஸ் வென்றால் பேட்டிங்கை தேர்ந்தெடுக்க வேண்டும் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், " நீங்கள் (லக்னோ) டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை இலக்காக நிர்ணயிக்க வேண்டும். சேசிங்கில் ஐதராபாத் தடுமாறலாம். சேசிங்கில் இருக்கிற அழுத்தம் உண்மையானது. ஐதராபாத் அணி 200-225 ரன்களை சேஸ் பண்ணும் திறன் கொண்டது. ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்களால் அதை செய்ய முடியுமா? என்பது கேள்விக்குறிதான்" என்று கூறினார்.






