சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட காரணம் இதுதான் - இந்திய முன்னாள் வீரர்

image courtesy: AFP
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை,
8 அணிகள் இடையிலான 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக ரோகித் தொடர்கின்ற வேளையில் துணை கேப்டன் பதவி சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பும்ராவை அடுத்த கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாகும்.
இந்நிலையில் சுப்மன் கில் வருங்காலத்தில் இந்திய அணியை கேப்டனாக தலைமை தாங்கும் திறமையை கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். குறிப்பாக விராட் கோலியை போல் அணியை வழி நடத்தும் திறமை அவரிடம் இருப்பதாக ரெய்னா வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார். அதை ரோகித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் கண்டறிந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ரெய்னா பேசியது பின்வருமாறு:- "சுப்மன் கில் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார். ஒருநாள் அணியில் அவர் நன்றாக விளையாடியுள்ளார். ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடரில் இளம் வீரருக்கு துணை கேப்டன்ஷிப் போன்ற பொறுப்பை கொடுப்பது அவருடைய தன்மையை பேசுகிறது. யார் அடுத்த கேப்டனாக வேண்டும் என்பது பற்றி ரோகித் சர்மாவுக்கு தெளிவாக தெரியும். சுப்மன் கில், ஐ.பி.எல். தொடரில் நாம் பார்த்த சிறந்த கேப்டன்களில் ஒருவர். குஜராத் அணியை அவர் நன்றாக வழி நடத்துகிறார். கடந்த 12 - 16 மாதங்களில் அவர் வெளிப்படுத்திய செயல்பாடுகள் இந்த முடிவை நியாயப்படுத்துகிறது.
அதனாலேயே ரோகித் சர்மாவும் அவருடன் தொடக்க வீரர்களாக விளையாடி வருகிறார். இது ரோகித் சர்மா மற்றும் தேர்வாளர்களிடமிருந்து சிறந்த நகர்வு. கில் கிட்டத்தட்ட விராட் கோலி போல அணியை வழி நடத்துகிறார் என்பதை ரோகித் பார்த்துள்ளார். களத்தில் அவருடைய வேலை நெறிமுறைகள் நன்றாக இருக்கிறது. அணியை முன்னின்று வழிநடத்துவது பற்றி தெரிந்து வைத்துள்ள கில்லுக்கு போட்டியை பற்றிய வலுவான விழிப்புணர்வும் இருக்கிறது. எனவே இது தேர்வாளர்கள் மற்றும் ரோகித் சர்மாவிடமிருந்து கிடைத்த நல்ல முடிவு" என்று கூறினார்.






