ரோகித், விராட் பார்முக்கு திரும்ப ஒரே வழி இதுதான் - பாக்.முன்னாள் வீரர் அட்வைஸ்
பாபர் அசாம் போல விராட் கோலியும் ரோகித் சர்மாவும் சுமாராக பேட்டிங் செய்ததாக பாசித் அலி கூறியுள்ளார்.
லாகூர்,
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது. இதன் மூலம் சொந்த மண்ணில் 24 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்த தோல்விக்கு நியூசிலாந்தின் சுழற்பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது.
பெங்களூருவில் நடைபெற்ற 2-வது போட்டியில் சான்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா, மும்பையில் நடைபெற்ற கடைசி போட்டியில் அஜாஸ் சுழலில் மொத்தமாக அடங்கியது. இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக பொறுப்புடன் விளையாட வேண்டிய முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தொடர் முழுவதுமே சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்விக்கு முக்கிய காரணமாய் அமைந்தனர்.
இந்நிலையில் பாபர் அசாம் போல கடைசியில் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் சுமாராக பேட்டிங் செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார். மேலும் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியா தொடருக்கு முன் அவர்கள் உள்ளூர் தொடரில் விளையாடுவதே பார்முக்கு திரும்ப ஒரே வழி என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளா.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பாபர் அசாமுக்குப் பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் சுமாரான பார்மில் உள்ளனர். ரோகித் சர்மா முதல் 2 பந்துகளை தவற விட்டபோது மூன்றாவது கால் உயரத்துக்கு வந்தது. அதை அவர் இறங்கி சென்று பவுண்டரி அடிக்க முயற்சித்தார். இது அவருடைய கால்கள் சரியாக நகரவில்லை என்பதை காட்டுகிறது. அதற்கு காரணம் அவருடைய பார்ம் நன்றாக இல்லை. பின்னர் அவர் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் வாயிலாக பவுண்டரி அடித்தார். விராட் கோலியும் பார்மில் இல்லை.
ஆஸ்திரேலியா செல்வதற்கு முன் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். ரோகித் சர்மாவும் உள்ளூரில் விளையாட வேண்டும். ஏனெனில் வெறும் பயிற்சிகள் மட்டும் போதாது. இந்தியாவுக்கு தேர்வாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி தயாராக இருப்பது அவசியம் என்ற நிலைமை வரவேண்டும். சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் ஆகியோர் கூட கடினமான நேரங்களில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சுதந்திரமாக விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். அதுவே அவர்கள் இப்படி சுமாராக விளையாடுவதற்கான காரணியாக அமைந்துள்ளது" என்று கூறினார்.