பாகிஸ்தானின் தோல்விக்கு இதுவே முக்கிய காரணம் - வாசிம் அக்ரம்

Image Courtesy: @BCCI
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்றிரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.
துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்றிரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்திருந்தது.
‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும் (37 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் 63 பந்துகளில் ரன்கள் எடுக்காததே தங்களுடைய தோல்விக்கு காரணமானதாக முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
குல்தீப் பந்து வீசும் விதத்தை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை. அது பற்றி நான் போட்டிக்கு முந்தைய நிகழ்ச்சியில் கிரேட் பேட்ஸ்மேன் கவாஸ்கரிடம் பேசினேன். அப்போது குல்தீப்பின் முன்னங்கையை படிக்காத வரை உங்களால் அவர் எம்மாதிரியான பந்துகளை வீசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாது என கவாஸ்கர் தெரிவித்தார். அவர் சொன்னதே நடந்தது.
குல்தீப்புக்கு எதிராக ஒவ்வொரு 2வது பந்திலும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் அடித்தார்கள். அப்படியானால் நீங்கள் அவருக்கு எதிராக எதையுமே படிக்கவில்லை என்று அர்த்தம். பாகிஸ்தான் தங்களுடைய ஆட்டத்தில் 63 டாட் பந்துகளை விளையாடியது. அப்படியானால் 10 ஓவருக்கு மேல் அவர்கள் டாட் பந்துகளை மட்டுமே எதிர்கொண்டுள்ளனர்.
அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு பாராட்டுக்கள். ஹசன் நவாஸ், உங்களுடைய கேப்டன் ஹாரிஸ் ஆகிய அனைவருமே திறமையான வீரர்கள். ஆனால் நீங்கள் சூழ்நிலையைப் படித்து உங்களுடைய பவுலரை தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும். ஆனால் அவர்கள் அனைவருமே 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக மட்டுமே விளையாட முயற்சித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.






