அவருடைய திறமைக்கும் தரத்திற்கும் இதெல்லாம் குறைவு - இந்திய வீரர் குறித்து ஹர்பஜன் சிங்


அவருடைய திறமைக்கும் தரத்திற்கும் இதெல்லாம் குறைவு - இந்திய வீரர் குறித்து ஹர்பஜன் சிங்
x
தினத்தந்தி 20 Dec 2024 9:42 PM IST (Updated: 20 Dec 2024 9:45 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில் 3வது போட்டி டிராவில் முடிந்தது.

இந்தத் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற முன்னணி பேட்ஸ்மேன்களே தடுமாறி வருகிறார்கள். ஆனால் கே.எல். ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த தொடருக்கு முன்னதாக கேல் ராகுல் பார்மின்றி தவித்தார். இதனால் அவரை இந்திய அணியிலிருந்து நீக்க வேண்டுமென விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ரோகித் சர்மாவுக்கு பதிலாக இத்தொடரில் தொடக்க வீரராக விளையாடும் வாய்ப்பு பெற்ற ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கே.எல். ராகுல் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 34.54 என்ற பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார். ஆனால் அவருடைய தரத்திற்கும் திறமைக்கும் அது குறைவு என்று ஹர்பஜன் சிங் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் இங்கிருந்து ஓப்பனிங் இடத்தை இறுக்கமாக பிடித்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த 5 வருடத்தில் ராகுல் 50 சராசரியை தாண்டுவார் என்றும் ஹர்பஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு:- "நல்ல திறமையை கொண்டுள்ள ராகுல் சரியான பேட்ஸ்மேன். அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான டெக்னிக் இருக்கிறது. கடினமான பந்துகளை எப்படி விட வேண்டும் என்பதை அறிந்துள்ள அவரிடம் அனைத்து விதமான ஷாட்டுகளும் உள்ளது.

வேகம், சுழல் ஆகிய பந்துகளை நன்றாக எதிர்கொள்ளும் அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளையும் நன்றாக அடிக்கிறார். எனவே அவருடைய தரத்திற்கும் திறமைக்கும் பேட்டிங் சராசரி 50 - 55ஆக இருக்க வேண்டும். எனவே இங்கிருந்து அவரிடம் பெரிய முன்னேற்றத்தை காணலாம். நிறைய மேடு பள்ளங்களை கொண்ட அவர் காயத்தாலும் நீண்ட காலம் விளையாடவில்லை.

இருப்பினும் தற்போது தொடர்ச்சியாக விளையாடும் அவருக்கு ஓப்பனிங் சரியான இடம். எனவே அவருடைய கெரியர் இங்கிருந்து மேலே செல்வதை நாம் எதிர்பார்க்கலாம். அடுத்த 5 வருடத்திற்கு பின் ராகுல் 50 - 55 சராசரியை கொண்டிருப்பதைப் பற்றி நாம் பேசுவோம்" என்று கூறினார்.


Next Story